செய்திகள்

பழைய நோட்டுகள் இருப்பதால் விதைகள் வாங்க முடியவில்லை: விவசாயிகள் கடும் அவதி

Published On 2016-11-14 18:17 GMT   |   Update On 2016-11-14 18:17 GMT
பழைய நோட்டுகளை கடைகளில் வாங்க மறுப்பதால், விதைகள் வாங்க முடியவில்லை என்று விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அமிர்தசரஸ்:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம்தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பை தலைவர்கள் பலர் வரவேற்றாலும் நாடு முழுவதும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் மக்கள் தங்களிடம் பணம் இருந்தபோதும், அது பழைய நோட்டுகளாக இருப்பதால பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ரூபாய் நோட்டுகள் விவகாரம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளையும் கடுமையாக பாதித்துள்ளது. பழைய நோட்டுகளை கடைகளில் வாங்க மறுப்பதால், விதைகள் வாங்க முடியவில்லை என்று விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

பழைய நோட்டுகள் செல்லாமல் போனதால், விதைகள் வாங்க போதுமான பணம் இல்லை. அரசு எங்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவ வேண்டும்.

எங்களிடம் உள்ள நோட்டுகளை கடைக் காரர்கள் வாங்க மறுக்கிறார்கள். சில்லறையும் கிடைப்பதில்லை. அதனால் விதைகள் வாங்குவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் என்ன செய்ய?

விதைகள் விதைக்க வில்லை என்றால் நாங்கள் என்ன உண்ணுவது? இந்த நிலைமை தொடர்ந்தால் எங்களது குழந்தைகள் பட்டினி கிடக்க நேரிடும்.

இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டனர்.

Similar News