செய்திகள்

6 மாணவிகளின் தலைமுடியை துண்டித்த பள்ளி ஆசிரியர் கைது

Published On 2016-11-12 11:26 GMT   |   Update On 2016-11-12 11:26 GMT
சத்திஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 மாணவிகளின் தலைமுடியை துண்டித்த பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
ராய்ப்பூர்:

சத்தீஷ்கார் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் உள்ள நகரபாலி என்ற இடத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் புஷ்பேந்திர பட்டேல்.

இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள் தலைமுடியை அதிக நீளமாக வளர்த்து அதை நன்றாக அலங்கரித்து பள்ளிக்கு வந்தனர்.

இதை பார்த்த ஆசிரியர் புஷ்பேந்திர பட்டேலுக்கு கோபம் ஏற்பட்டது.

அவர், அந்த மாணவிகளிடம் நீங்கள் பள்ளிக்கு படிக்க வருகிறீர்களா? இல்லை ஸ்டைல் பண்ண வருகிறீர்களா? என்று கேட்டு திட்டினார்.

பின்னர் 2 கத்திரிக்கோலை எடுத்து வந்த அவர், தலைமுடியை அதிக நீளத்துக்கு வைத்திருந்த 6 மாணவிகளை தனியாக அழைத்தார். அவர்களுடைய தலைமுடியை கத்திரிக்கோலால் துண்டித்தார்.

மாலையில் வீடு திரும்பிய மாணவிகள் நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் கூறினார்கள். இதில், கடும் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆசிரியர் மீது புகார் கொடுத்தனர்.

போலீசார் அவர் மீது தாக்குதல், பெண்களை அவமதித்தல், சிறுவர்களை கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இது தொடர்பாக கல்வித்துறை சார்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News