செய்திகள்

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: சட்டசபை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்- எடியூரப்பா அறிக்கை

Published On 2016-09-21 12:41 IST   |   Update On 2016-09-21 12:47:00 IST
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க உடனடியாக சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என எடியூரப்பா கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

பெங்களூரு:

கர்நாடக மாநில பா.ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்திற்கு காவிரியில் 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது.

அறிவியலுக்கு மாறாக உள்ள இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. கர்நாடகம் சந்தித்து வரும் பிரச்சினையை சுப்ரீம் கோர்ட்டு பரிசீலிக்கவில்லை. அணையில் இருக்கும் தண்ணீர் பெங்களூரு உள்பட 6 நகரங்கள் மற்றும் 600 கிராமங்கள் ஆகியவற்றின் குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தின் சாதகம், பாதகம் குறித்து ஆழமாக ஆராயப்பட வேண்டியுள்ளது.

காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் விவரமானவாதத்தை எடுத்து வைப்பதில் மாநில அரசு தோல்வியடைந்து விட்டது. தற்போதைய நிலைமைக்கு மாநில அரசுதான் பொறுப்பு. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க உடனடியாக சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News