செய்திகள்

காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 17 வீரர்கள் பலி

Published On 2016-09-18 05:53 GMT   |   Update On 2016-09-18 05:53 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாம் மீது உள்ளூர் தீவிரவாதிகள் இன்று அதிகாலை நடத்திய அதிரடி தாக்குதலில் 17 ராணுவ வீரகள் பலியாகினர். 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாம் மீது உள்ளூர் தீவிரவாதிகள் இன்று அதிகாலை நடத்திய அதிரடி தாக்குதலில் 17 ராணுவ வீரகள் பலியாகினர். 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையோரம் உரி என்ற முக்கிய நகரம் அமைந்துள்ளது. உரி நகரில் அப்பகுதியில பணியாற்றும் ராணுவ படைப்பிரிவினருக்கான தலைமை முகாம் ஒன்று இயங்கி வருகிறது.

இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த முகாமுக்கு அரணாக அமைக்கப்பட்டுள்ள கம்பிவேலியை வெட்டிவிட்டு முகாமுக்குள் ஆயுதமேந்திய உள்ளூர் தீவிரவாதிகள் நுழைந்தனர்.

முகாமின் மீது  வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் ஆவேசமாக தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த ராணுவ வீரர்களும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர்.

இருதரப்பினருக்கும் இடையில் அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்துவரும் நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலியானதாகவும், பத்துக்கும் அதிகமான வீரர்கள் காயமடைந்ததாகவும் காலை 9 மனியளவில் தெரியவந்தது.

காயம் அடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நிலையில் காலை 11 மணி நிலவரப்படி பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. தாக்குதல் நடத்தவந்த 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் முகாம் வளாகத்துக்குள் பதுங்கி இருப்பதாக தெரிகிறது.

இந்த தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் கூடுதலாக ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலவரத்தை நேரில் பார்வையிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசானை நடத்த ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர், ராணுவ தளபதி தல்பீர் சிங் ஆகியோர் உரி நகருக்கு விரைந்து சென்றுள்ளனர்.

காயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை அவர்கள் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News