செய்திகள்

போலீஸ்காரரை அடித்த மராட்டிய மாநில எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

Published On 2016-08-19 10:09 GMT   |   Update On 2016-08-19 10:09 GMT
மராட்டிய மாநிலத்தில் போலீஸ்காரரை அடித்த எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை:

மராட்டிய மாநில சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர், ராமச்சந்திரா புனாஜி அவசாரே. சமீபத்தில் இங்குள்ள பந்தாரா பகுதியில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமச்சந்திரா புனாஜி அவசாரே பேசியபோது, இவரது கார் டிரைவரான துலாராம் செலோகர் என்பவர் அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார்.

அவரது செயலால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறிய போலீசார், அவரை விலகி செல்லும்படி கூறியுள்ளனர். போலீசாரின் பேச்சை கேட்க மறுத்த துலாராம், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே, அவரை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

பொதுக்கூட்டம் முடிந்து தனது காரில் வந்து அமர்ந்த எம்.எல்.ஏ., ராமச்சந்திரா புனாஜி அவசாரே, தனது டிரைவரை போலீசார் அழைத்து சென்றதை அறிந்து ஆத்திரம் அடைந்தார்.

நேராக தும்சார் போலீஸ் நிலையத்துக்கு சென்ற அவர், அங்கு பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிளை சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்த தனது டிரைவரை அழைத்து கொண்டு சென்றார். எம்.எல்.ஏ. அடித்ததில் காதில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சைபெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் ராஜு சதாவானே, இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து, பணியில் இருந்த அரசு ஊழியரை காயப்படுத்தி, அவரை கடமை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் ராமச்சந்திரா புனாஜி அவசாரே மீது போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News