செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதான உண்டியல் அருகே பக்தரிடம் ரூ.1 லட்சம் திருடிய பெண்

Published On 2016-04-25 10:24 IST   |   Update On 2016-04-25 10:24:00 IST
திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளே பக்தரிடம் ரூ.1 லட்சம் பணத்தை திருடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருமலை :

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதிர். இவர், நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு வந்தார். காணிக்கை செலுத்துவதற்காக ஒரு கைப்பையில் ரூ.1 லட்சம் பணம் வைத்திருந்தார்.

கோவிலில் சாமி தரிசனம் செய்து முடிந்ததும், பிரகாரத்தை வலம் வந்து பிரதான உண்டியலில் காணிக்கையை செலுத்துவதற்காக கைப்பைக்குள் கையை விட்டு பணத்தை எடுக்க முயன்றார்.

அப்போது அவரின் கைப்பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர், கோவில் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரிகள், திருமலை போலீசாரிடம் புகார் செய்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிமனோகராச்சாரிக்கு தகவல் தெரிவித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டுவை கோவிலுக்குள் வரவழைத்து அவரிடம் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காண்பித்து பரிசீலனை செய்தனர்.

கோவிலில் பிரதான உண்டியலுக்கு அருகில் சுதிர் வரும்போது அவரின் கைப்பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் காணிக்கை தொகையை ஒரு பெண் திருடும் காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண், பணத்தை திருடிக்கொண்டு வேகமாக கோவிலில் இருந்து வெளியேறும் காட்சிகளை அதிகாரிகள் பார்த்தனர்.

உடனடியாக அந்தப் பெண்ணை கையும் களவுமாக பிடிக்க கோவில் உள்ளேயும், வெளியேயும் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர். ஆனால், அவர் தப்பிச்சென்று விட்டார்.

அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வைத்து பறக்கும்படை மற்றும் பாதுகாப்புப்படை ஊழியர்கள், போலீசார் திருமலை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காணிக்கை தொகையை திருடிச்சென்ற பெண்ணை விரைவில் பிடித்து விடுவதாக போலீசாரும், தேவஸ்தான ஊழியர்களும் தெரிவித்தனர்.

Similar News