இந்தியா

நாடு முழுவதும் 1,472 ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் காலி: மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்

Published On 2022-08-05 07:58 IST   |   Update On 2022-08-05 07:58:00 IST
  • சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் ஆண்டுக்கு 180 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிக்கு சேர்க்கப்படுகின்றனர்.
  • நாடு முழுவதும் 864 ஐ.பி.எஸ். பணியிடங்கள் காலியாக உள்ளன

புதுடெல்லி :

பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலன்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 1,472 ஐ.ஏ.எஸ். பணியிடங்களும், 864 ஐ.பி.எஸ். பணியிடங்களும் காலியாக உள்ளன.

* நேரடியாக பணியமர்த்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் உகந்த சேர்க்கையை உறுதி செய்வதற்காக பஸ்வான் கமிட்டியின் பரிந்துரைகள்படி, சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் ஆண்டுக்கு 180 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கடந்த 2012 முதல் பணிக்கு சேர்க்கப்படுகின்றனர்.

* ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பொறுத்தமட்டில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் நேரடி சேர்க்கை நியமன எண்ணிக்கை 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்களவையில் சாலைபோக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். அந்தப் பதிலில் இடம் பெற்றிருந்த முக்கிய தகவல்கள் இவை:-

* நாட்டில் 21 கோடிக்கும் அதிகமான 2 சக்கர வாகனங்களும், 7 கோடிக்கும் கூடுதலான 4 சக்கர வாகனங்களும் உள்ளன.

* மொத்த வாகனங்களில், 5 லட்சத்து 44 ஆயிரத்து 643 இருசக்கர வாகனங்களும், 54 ஆயிரத்து 252 நான்கு சக்கர வாகனங்களும் மின்வாகனங்கள் ஆகும். இது கடந்த 3-ந் தேதி நிலவரம் ஆகும்.

* 2017-20 ஆண்டுகளில் மொத்தம் 5 லட்சத்து 82 ஆயிரத்து 157 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். 2017-ல் 1 லட்சத்து 47 ஆயிரத்து 913 பேரும், 2019-ல் 1 லட்சத்து 51 ஆயிரத்து 113 பேரும், 2020-ல் 1 லட்சத்து 31 ஆயிரத்து 714 பேரும் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். 2018-ல்தான் அதிகபட்ச எண்ணிக்கையாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 417 பேர் பலியாகி உள்ளனர்.

இவ்வாறு அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News