கதம்பம்

அர்த்தம் புரியாமல் பாடமாட்டேன்...

Update: 2022-11-18 10:52 GMT
  • “அர்த்தம் தெரியாவிட்டால் ஆயிரக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் பாட மாட்டான் இந்த சௌந்தரராஜன்...”
  • இப்படி சொல்லிவிட்டு ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து புறப்பட்டும் விட்டார் டிஎம்எஸ்.

"முத்தைத்தரு பத்தித் திருநகை..." என்று படித்துவிட்டு, இதன் பொருள் என்ன? என்று கேட்டு உடல் குலுங்க குலுங்க சிரித்தார் டி.எம்.எஸ்.

ஒருவரும் பதில் சொல்லவில்லை.

"என்னய்யா சொல்கிறீர்கள்? இந்த பாடல் வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று இங்கே இருக்கும் ஒருவருக்குமே தெரியாதா ?"

ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்த அத்தனை பேரும் டிஎம்எஸ்ஸின் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தார்கள்.

அருணகிரிநாதர் பட பாடல் பதிவு நேரம் அது. (1964)

சிரிப்பதை நிறுத்திய டிஎம்எஸ்ஸின் குரல் கொஞ்சம் கோபத்தோடு உயர்ந்தது.

"சொல்லுங்கள் ஐயா, அர்த்தம் தெரியாவிட்டால் இதை நான் எப்படி உணர்வுகளோடு பாட முடியும் ? அந்தப் பாடலை கேட்பவர்கள்தான் எப்படி அதை முழுமையாக ரசிக்க முடியும் ?"

சுற்றி இருந்தவர்களின் மௌனம் தொடர்ந்தது.

ஏனெனில் அவர்களுக்கு தெரியும், எந்த ஒரு பாடலையும் அதன் அர்த்தம் தெரியாமல், உணர்வுகள் புரியாமல் ஒருபோதும் பாடமாட்டார் டிஎம்எஸ்.

மீண்டும் ஒரு முறை தன் கையிலிருந்த அந்த பாடல் வரிகளை வாசித்துப் பார்த்தார் டிஎம்எஸ்.

"முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்..."

திரும்ப திரும்ப வாசித்துப் பார்க்கிறார் டி.எம்.எஸ். அதன் பொருள் விளங்கவில்லை.

தலைநிமிர்ந்து தன்னை சுற்றி இருந்தவர்களை பார்த்த பின், அழுத்தமாக உதட்டை பிதுக்கி விட்டு, பாடல் எழுதி இருந்த காகிதத்தை கீழே வைத்தார் டி.எம்.எஸ்.

"அர்த்தம் தெரியாவிட்டால் ஆயிரக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் பாட மாட்டான் இந்த சௌந்தரராஜன்..."

இப்படி சொல்லிவிட்டு ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து புறப்பட்டும் விட்டார் டிஎம்எஸ்.

அவரது பிடிவாதம் அறிந்த படக் குழுவினர் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்.

அப்போது அருகில் இருந்த யாரோ ஒருவர் அசரீரி போல குரல் கொடுத்தார் : "வாரியார் சுவாமிகளை கேட்டால் இதன் பொருள் புரியும்..."

"அப்படியா ?" என்று திரும்பி அவரைப் பார்த்து கேட்ட டி.எம்.எஸ்., அடுத்த நிமிடமே வாரியார் வீட்டை நோக்கி விரைந்து புறப்பட்டார்.

வரவேற்றார் வாரியார்.

பணிவோடு தன் அருகில் வந்து அமர்ந்த டிஎம்எஸ்-க்கு புன்னகையோடும் பொறுமையோடும் பொருள் விளக்கினார் வாரியார்.

"முத்தைத்தரு பத்தித் திருநகை ...

வெண்முத்தை நிகர்த்த, அழகான

பல்வரிசையும் இளநகையும் அமைந்த....

அத்திக்கு இறை ...

தெய்வயானை அம்மைக்குத் தலைவரே...

சத்திச் சரவண...

சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே...

முத்திக்கொரு வித்துக் குருபர...

மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு

விதையாக விளங்கும் ஞான குருவே..."

இப்படியாக ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருளை வாரியார் விளக்கமாக எடுத்துச் சொல்ல சொல்ல,

அதை கவனமாக கேட்டுக் கொண்டு, அதன் பிறகே 'அருணகிரிநாதர்' படத்தின் அந்தப் பாடலைப் பாடினாராம் டி.எம்.எஸ்.

-துலாக்கோல் சோம நடராஜன்

Tags:    

Similar News