கதம்பம்

முகத்தில் தெரியும்...

Published On 2023-01-18 15:42 IST   |   Update On 2023-01-18 15:42:00 IST
  • “அது ஒரு கலை.... ஒருத்தருடைய முகத்தைப் பார்த்தே அவரோட குணாதிசயத்தைக் கண்டுபிடிக்கிறது!”
  • ஒருத்தருடைய மூக்கு, வாய், தாடை, கன்னம், கண்கள், நெற்றி, காது – இதுகளோட வடிவமைப்பைப் பார்தே அவர் கோபக்காரரா... அமைதியானவரா...

"ஏங்க... காலங்காத்தாலே முகத்தை உம்முன்னு ஒரு மாதிரியா வச்சிக்கிட்டு உக்காந்திருக்கிங்க...?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லையே...!"

"உங்ககூட இருபது வருஷமா குடும்பம் நடத்தறேன்...இதுகூடத் தெரியாதா எனக்கு? என்ன விஷயம் சொல்லுங்க!"

" அது... அது... வந்து...!"

" என்னோட பெட்டியிலேயிருந்து இருபது ரூபா பணம் எடுத்துட்டீங்க... அதானே...?"

"ஹி...! ஹி...!"

"Phrenology தெரியுமா உங்களுக்கு?"

"என்னது...?"

"அது ஒரு கலை.... ஒருத்தருடைய முகத்தைப் பார்த்தே அவரோட குணாதிசயத்தைக் கண்டுபிடிக்கிறது!"

"அது எப்படி..?"

" ஒருத்தருடைய மூக்கு, வாய், தாடை, கன்னம், கண்கள், நெற்றி, காது – இதுகளோட வடிவமைப்பைப் பார்தே அவர் கோபக்காரரா... அமைதியானவரா... அன்புள்ளம் கொண்டவரா... சந்தேகப்பிராணியா... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறவரா... இரக்கமுள்ளவரா... புகழ்ச்சியை விரும்புகிறவரா... சேவை மனப்பான்மை உள்ளாவரா... இது மாதிரி பல குணங்களைக் கண்டுபிடிக்கிற கலை இது!"

"உனக்கு தெரியுமா அது?"

"இப்பத்தான் பழகிக்கிட்டிருக்கேன்... ஓரளவுக்கு சரியா யூகிச்சுடுவேன்!"

"நீ இப்படி சொல்றதைக் கேக்கறப்போ என் மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?"

ஆனா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு... இந்த கலை எனக்கு 1975ஆம் வருஷம் நவம்பர் மாசம் 13ஆம் தேதி தெரியாமப் போச்சேன்னு நினைக்கிறப்போ எனக்கு எவ்வளவு கவலையா இருக்குத் தெரியுமா?"

"அன்றைக்கு என்ன விசேஷம்?"

"அன்றைக்குத்தான் உங்க முகத்தை நான் முதல் தடவையா பார்த்தேன்!"

- தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Tags:    

Similar News