- வறுமையின் வெம்மை தாங்காது தங்கள் ஊரான கொடுமுடியை விட்டுக் கரூருக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தனர்.
- குடும்பத்தின் நிலையறிந்து உதவிகள் செய்து பிழைக்க வைத்துக் கொண்டிருந்தார் ஒரு மாமனிதர்.
"பிள்ளைகளே! ஆற்றுக்குப் போகலாம் வாருங்கள்'' என்று அழைத்தாள் அந்த அம்மா.
இரு பெண்கள் ஒரு சிறுவன் என மூவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.
" 'ஏனம்மா ஆற்றுக்கு அழைத்துச் செல்கிறாய் குளிப்பதற்காகவா?" என்று அதில் ஒரு பெண் குழந்தை துணிந்து கேட்டாள்.
அந்தத் தாய்க்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. கண்களிலிருந்து நீர் திரண்டு வழிந்தது.'
"என் அருமைக் குழந்தைகளே! உங்கள் பசியெடுக்கும் வயிற்றுக்கு உணவு போட இந்தப் பாழாய்ப்போன தாயால் முடியவில்லை. வறுமையின் கொடுமையோ வாட்டி எடுக்கிறது. இதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. உங்கள் மூவரையும் ஆற்றில் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்திலே தள்ளிவிட்டு, நானும் உங்களுடனேயே சாகப் போகிறேன்'' என்று கதறித் துடித்தாள்.
அதைக் கேட்ட அந்த மூவரில் கேள்வி கேட்ட அதே பெண் குழந்தை, தாயைத் தடுத்து, மனம் மாற்றி, "எப்படியாவது சமாளித்து வாழ்ந்து விடலாம். நீ எடுத்திருக்கும் இந்த முடிவு சரியில்லை. வீட்டுக்கு வா போகலாம்" என்று சொல்லி தாயையும், தன் உடன் பிறப்புகளையும் திருப்பி அழைத்து வந்துவிட்டாள்.
வறுமையின் வெம்மை தாங்காது தங்கள் ஊரான கொடுமுடியை விட்டுக் கரூருக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தனர். அந்தக் குடும்பத்தின் நிலையறிந்து உதவிகள் செய்து பிழைக்க வைத்துக் கொண்டிருந்தார் ஒரு மாமனிதர்.
தாயைத் தடுத்து அழைத்து வந்த அந்தச் சிறுமி, ஒரு நாள் கரூர் வீதியில் நின்று கொண்டு ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தபடி இருந்தாள். அப்போது, அந்த வழியாகச் சென்ற உதவி காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி ஐயர் அந்தச் சிறுமியின் துருதுருப்பையும், துள்ளலையும் கண்டு, "நாடகத்தில் சேர்த்து விடுகிறேன். நடிக்கிறாயாம்மா?" என்று கேட்டார்.
அந்தச் சிறுமி மகிழ்ச்சியோடு தலையை அசைத்தாள். அவளை அப்போது கும்பகோணம் பகுதியில் நாடகம் நடத்திக்கொண்டிருந்த வேல் நாயர் நாடகக் கம்பெனியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார்.
எட்டு வயது நிரம்பாத அந்தச் சிறுமிக்கு அங்கே கிடைத்த பாத்திரம் என்ன தெரியுமா? நல்லதங்காள் நாடகத்தில் கிணற்றில் தள்ளப்படும் குழந்தைகளிலே ஒருத்தி! அவர்தான் பின்னாளில் இலட்ச ரூபாய் பெற்ற கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்ட நடிகை கே.பி. சுந்தராம்பாள்!
கே.பி. சுந்தராம்பாள் ஒரு கதாபாத்திரத்தை ஏற்றால் அதில் அப்படியே பொறுந்திவிடும் இயல்பு கொண்டவர். அவரை, ஔவையாக காரைக்கால் அம்மையாக கௌந்தி அடிகளாக பக்த நந்தனாராகத்தான் காணமுடியுமே தவிர ஒரு நடிகையாகத் திரையில் காணவே முடியாது.
திரைக் கலைத்துறையில் நடிப்புத் துறையில் இருந்து தமிழக சட்டப்பேரவை அமைப்புக்குள் நுழைந்த முதல் நபரும் கே.பி.சுந்தராம்பாள் தான்!
-பாண்டியன் சுந்தரம்