கதம்பம்

மனசாட்சியின் பெயரால்...

Published On 2022-07-07 15:49 IST   |   Update On 2022-07-07 15:49:00 IST
  • பிராட்லா பிடிவாதத்தைக் கண்ட அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வில்லியம் கிளாட்ஸ்டோன் கூட இறங்கி வந்தார்.
  • ‘சரி பரவாயில்லை’ என்று முடிவில் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

பிரிட்டனில் அதுவரை பாராளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெறுவோரெல்லாம் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் போது கடவுள் பெயராலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற நடைமுறையே இருந்து வந்தது. இதைப் போராடி மனச்சாட்சிப்படி உறுதி எடுக்கக் காரணமாக இருந்தவர் பிராட்லா என்பவர் தான்!

சிறு வயதிலேயே நிறைய கேள்வி கேட்கும் வழக்கம் உள்ளவர் பிராட்லா. அப்படி பைபிளில் உள்ள முரண்களை மத குருமார்களிடம் கேள்விகளாகக் கேட்கப்போய் வீட்டை விட்டே தந்தையால் துரத்தி அடிக்கப்பட்டார். முன்னிலும் அதி தீவிரமாக கடவுள் மறுப்பாளராக ஆகி, பெண் விடுதலை உட்பட நிறைய பேசுபவராக மாறிப்போனார்.

அவர் பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு, நார்த் ஹாம்டன் பகுதியில் 1880-இல் போட்டி போட்டார். வெற்றியும் பெற்றார். பிரிட்டன் பாராளுமன்றம் சென்றார். சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்துவைக்க அவரை அழைத்தார். கடவுளின் சாட்சியாக என்று சொல்லிப் பதவி ஏற்குமாறு கூறினார். ஆனால் அவரோ,"இல்லாத கடவுளை நான் சாட்சிக்கு அழைத்துவர முடியாது" என்று கூறி, கடவுளின் பெயரால் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள உறுதியாக மறுத்துவிட்டார்.

"உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை; இந்தப் பேரவை நம்புகிறது, இந்த நாட்டின் அரசியல்சாசனம் நம்புகிறது, அதற்குக் கட்டுப்பட்டவர் நீங்கள்; எனவே, 'கடவுள் சாட்சியாக' என்று கூறித்தான் நீங்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதற்கு நீங்கள் மறுப்பீர்களேயானால் உங்கள் தேர்வு ரத்து செய்யப்படும்" என்றார் சபாநாயகர்.

அதற்கு சார்லஸ் பிராட்லா, "இந்த அவையின் ஆயுள்காலம் ஐந்து ஆண்டுகள்தான்; இந்த ஐந்து ஆண்டுகளுக்காக என் ஆயுள்முழுவதும் நான் கட்டிக்காத்துவரும் என்கொள்கைகளை விட்டுவிடமுடியாது; என் தேர்வை நீங்கள் ரத்துசெய்ய விரும்பினால், தாராளமாக செய்துகொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.

பிராட்லா பிடிவாதத்தைக் கண்ட அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வில்லியம் கிளாட்ஸ்டோன் கூட இறங்கி வந்தார், 'சரி பரவாயில்லை' என்று முடிவில் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவையில் உறுப்பினர்களாக இருந்த மத நம்பிக்கைவாதிகள் கொஞ்சமும் தயவுதாட்சண்யம் இல்லாமல், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது தேர்வை அவருக்கு எதிராக வாக்களித்து ரத்து செய்தார்கள்.

இதைத் தொடர்ந்து லண்டன் டவர் சிறையில் அடைத்தும் வைக்கப்பட்டார். பிராட்லாவைத் தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருந்தால், அவர் மேல் மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டு விடும் என்று சிலர் சொல்ல ஆரம்பித்தார்கள்; இதனால் பின்னர் விடுதலை ஆனார்.

அவருடைய தொகுதிக்கு மீண்டும் 26-4-1881 தேர்தல் நடந்தது; மீண்டும் பிராட்லா போட்டியிட்டார்; மீண்டும் வெற்றிபெற்றார்; மீண்டும் அதே பிரச்சனை!

பார்த்தார் பிராட்லா, தனது இடத்தில் சபையில் அமர்ந்து கொண்டு எழ மறுத்தார். "எனக்கென்று ஒரு கொள்கை ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதை எந்தக்காரணத்திற்காகவும் என்னால் விட்டுத்தர இயலாது" என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் பிராட்லா. விடுவார்களா மத நம்பிக்கையாளர்கள்? குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே போட்டது மல்லாமல், மீண்டும் அவர் தேர்வை ரத்தும் செய்தார்கள்.

பிராட்லா மக்களிடம் சென்றார். இரண்டு லட்சத்து 41 ஆயிரத்து 990 பேரிடம் சபையில் அனுமதிக்க வேண்டி கையெழுத்து பெற்றுக் கொடுத்தார். சபாநாயகர், உறுப்பினர்கள், வெளியே இருந்த மதகுருமார்கள் அவரை அனுமதிக்கக் கூடாது என கண்டிப்புக் காட்டினார்கள்.

1884-ஆம் ஆண்டு மீண்டும் அவர் தொகுதிக்குத் தேர்தல் நடந்தது; மூன்றாவது முறையும் பிராட்லா போட்டியிட்டார்; இந்த முறை முந்தைய இரண்டுமுறை வாங்கிய வாக்குகளைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் பிராட்லா!

இம்முறை கெஞ்ச ஆரம்பித்தார்கள்: "தயவுசெய்து பிடிவாதம் பிடிக்காமல் இந்த அவையின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றார்கள்.

பிராட்லா மிகவும் உறுதியாகச் சொன்னார்: "நான் யார், என் கொள்கைகள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டுதான் என் தொகுதி மக்கள் என்னை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்; என் தேர்வை ரத்துசெய்வதன் மூலமாக என்னை தேர்ந்தெடுத்த மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்; அவர்களுடைய ஜனநாயக உரிமைகளை இழிவு செய்கிறீர்கள்; அவர்களுடைய தன்மானத்திற்கே சவால் விடுகிறீர்கள். இதற்குமேல் பேச என்னிடம் எதுவுமில்லை" என்று கூறி அவையில் அமர்ந்துவிட்டார். இந்தமுறை பிரிட்டன் பாராளுமன்றம் பணிந்தது.

"தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், கடவுளின் பெயரால் மட்டுமன்றி மனசாட்சியின் பெயராலும் பதவிஏற்கலாம்" என்று பிரிட்டனின் அரசியல் சட்டமே திருத்தப்பட்டது. இன்று பகுத்தறிவுவாதிகள் மனசாட்சியின் பெயரால் பதவி ஏற்பதற்கு சார்லஸ் பிராட்லாதான் காரணம்!

Tags:    

Similar News