கதம்பம்

அஞ்சறைப்பெட்டியின் மெய்க்காப்பாளன் 'சீரகம்'

Published On 2023-02-01 09:46 GMT   |   Update On 2023-02-01 09:46 GMT
  • வயிறு சார்ந்த உபாதைகள் என்றதுமே நம் நாட்டினர் தேடுவது அஞ்சறைப்பெட்டியில் உள்ள சீரகத்தை தான்.
  • உலக அளவில் கிட்டத்தட்ட 90 சதவீதம் சீரகம் இந்தியாவில் தான் உற்பத்தி ஆகிறது.

மஞ்சளுக்கு அடுத்தாற்போல் அடுப்பங்கரையில் அதிகம் பயன்படுத்தப்படும் நறுமணமூட்டி 'சீரகம்' தான். பண்டைய காலம் முதல் சீரகம் உணவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் நறுமணப்பொருள். உலகிலேயே மத்திய தரைக்கடல் உணவு முறையிலும், தெற்கு ஆசியாவின் உணவு முறையிலும் தான் சீரகம் மருந்துப்பொருளாக உணவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நமது பாரம்பரியம் 'உணவே மருந்து' கோட்பாட்டை கொண்டது என்பதற்கு இதுவே உதாரணம்.

5000 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்கம் மற்றும் ரோமானிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட சிறப்புடையது சீரகம். கிரேக்க நாட்டில் பண்டம் மாற்று வணிக முறையிலும், வரிகளை செலுத்துவதிலும், சீரகத்திற்கு தனி மதிப்பு கொடுத்து பிற பொருட்களுக்கு மாற்றாக அதை பெற்றுக்கொண்டதை வரலாறு தெரிவிக்கிறது. பண்டைய எகிப்திய நாகரிகத்தில், சீரகம் ஒரு மசாலாப் பொருளாகவும், மம்மிக்களை பதப்படுத்தி பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் நோய் தீர்க்கும் மருந்தாக, உடலை காக்கும் அமிர்தமாக, அதிகம் பயன்படுத்துவது நம் நாட்டு மருத்துவத்தில் தான்.

நம் முன்னோர்கள் அடுத்த தலைமுறையினர் பயன்படுத்தும் வண்ணமும், ஆரோக்கியத்திற்கு வித்திடும் வண்ணமும், சமூக நல அக்கறையில் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த மூலிகைகளின் பெயர்களை, மருத்துவக்குணங்களின் அடிப்படையில் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கான சீரகத்தின் பெயர்க்காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் சீர் + அகம் என்று பொருள்படும்படி உள்ளது. அதாவது 'அகத்தை சீர் செய்யும்' தன்மையுடையது. உடலுள் பாதிக்கப்பட்டு இருக்கும் உள்ளுறுப்புக்களை சீராக்கி, மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் என்பது இதன் பொருள். மேலும் சித்த மருத்துவம் 'பித்த நாசினி', 'போசனக் குடாரி' என்றெல்லாம் அடைமொழியிட்டு சீரகத்தை அழைப்பது சிறப்பு.

வயிறு சார்ந்த உபாதைகள் என்றதுமே நம் நாட்டினர் தேடுவது அஞ்சறைப்பெட்டியில் உள்ள சீரகத்தை தான். தண்ணீருக்கு பதிலாக சீரகத்தண்ணீர் குடிக்கும் பழக்கம் இன்றும் நம்மில் பலருக்கு உண்டு. 'சீரகம் இல்லாத உணவு சிறக்காது' என்பது பழமொழி. அதாவது சீரகம் இட்டு சமைக்காத உணவு ஆரோக்கியத்திற்கு சிறப்பாக இருக்காது என்பதை நம் முன்னோர்கள் ஆணித்தரமாக வலியுறுத்தி சென்றுள்ளனர். நாம் உணவில் சாதாரணமாக பயன்படுத்தும் சீரகத்தை அறிவியல் அடிப்படையிலும் உற்றுப்பார்க்கையில் ஆச்சர்யப்படுத்தும் வண்ணம் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கி உள்ளது சிறப்பு.

சித்த மருத்துவம் நோய்களுக்கு காரணமாக கூறுவது முக்குற்றத்தைத் தான். அவையாவன வாதம், பித்தம், கபம். இதில் வாதத்தை நம் உடலினை ஆட்சி செய்யும் அரசனாகவும், பித்தத்தை மந்திரியாகவும், கபத்தை போர்ப்படைத் தளபதியாகவும் ஒப்பிட்டு கூறுகிறது சித்த மருத்துவம். இவை மூன்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளே நோய்களுக்கு காரணம். இந்த மூன்றில் பித்தமாகிய மந்திரியை சமப்படுத்தி, பித்தம் சார்ந்த நோய்களை அணுகவிடாமல் மெய்க்காப்பாளனாக திகழ வல்லது சீரகம். இதனை "பித்தம் எனும் மந்திரியை பின்னப்படுத்தியவன்" என்று சித்த மருத்துவ இலக்கியமான 'தேரன் வெண்பா' சீரகத்தின் பெருமையை பறைசாற்றுகிறது.

பொன்னிறமான நிறத்தில் உள்ள சீரகம் லேசான காரமும், இனிப்பும் கலந்த சுவை உடையது. இதனை லேசாக வறுத்து பயன்படுத்த 'பித்த நோய்கள்' அனைத்தும் வராமல் காக்கும். பாதிக்கப்பட்ட பித்தம் அது இருக்கும் இடத்தைப் பொறுத்தும், தாக்கும் உறுப்புகளைப் பொறுத்தும், வெவ்வேறு குறிகுணங்களை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது.

அதாவது அதிகரித்த பித்தம் காமாலை உண்டாக்கும் என்பதைக்கடந்து, குடலில் புண்ணையும், தோலில் அழற்சியையும், கண்ணில் எரிச்சலையும், மூட்டுகளில் வீக்கத்தையும் இன்னும் பல நோய்களையும் உண்டாக்கும் என்கிறது சித்த மருத்துவம். ஆக, பித்தம் அதிகரிப்பதால் உண்டாகும் அத்தனை வியாதிகளுக்கும் சீரகம் நன்மருந்தாகும்.

சீரகமானது சித்த மருத்துவம் கூறுவதுபோல் பித்தத்தை சீராக்கி குளிர்ச்சியைத் தரவல்லது. ஆதலால் தான் பண்டைய காலம் முதல் அறிவியல் வானளவு உயர்ந்த இந்த நவீன காலத்திலும் பித்தம், பித்த வாந்தி, தலைசுற்றல் போன்ற பித்தம் தொடர்பான குறிகுணங்கள் என்றதுமே முதலில் வீட்டு வைத்தியமாய் பழகி வருவது 'சீரகத் தண்ணீர்' தான். சித்த மருத்துவம் நம் மரபோடும், வாழ்வியல் பண்பாட்டோடும் ஒன்றிணைந்து நம்மை காத்து வருகிறது என்பதற்கு இது உதாரணம்.

துரித உணவு வகைகளை அதிகம் நாடுபவர்கள் அவதிப்படும் முக்கியமான உடல் உபாதை 'அல்சர்' எனப்படும் 'வயிற்றுப்புண்' தான். நாட்பட்ட அசீரணக் கோளாறு வயிற்றுப்புண் நோய்க்கு வழிவகுக்கும். இதற்கு வருடக்கணக்கில் மருந்துகளை எடுத்துக்கொண்டும் மீளாதவர்கள் சீரகத்தை பொடித்து வெண்ணெயில் அல்லது நெய்யில் கலந்து உணவுக்கு முன் எடுத்துக்கொள்ள வயிற்றுப்புண் ஆறும். சீரண மண்டலம் சீராகும். பித்தம் குறைந்து, குடல் சுத்தமடையும். மொத்தத்தில் சீரண மண்டலம் சார்ந்த நோய்களுக்கு வைத்திய நண்பனாக உள்ளது சீரகம். உணவில் சேர்க்கப்படும் சீரகம், உணவு கெட்டு நஞ்சாவதை தடுப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாந்தியை கட்டுப்படுத்த சீரக தண்ணீரில் நாட்டுச்சர்க்கரை கலந்து கொடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. வயிற்றுப்போக்கிற்கு சீரகத்தை கருக வறுத்து கசாயம் இட்டு கொடுக்கும் பழக்கம் இன்றும் பல கிராமங்களில் வழக்கு முறையாக உள்ளது. அதை சமீபத்திய நவீன ஆய்வுகளும் உறுதி செய்வது என்பது பாட்டி வைத்தியத்திற்கு கிரீடம் வைப்பது போன்றது.

வயிற்றுப்புண் ஆற்ற முட்டை வெண்கருவுடன், சீரகம் அரை தேக்கரண்டி, சிறிது இந்துப்பு சேர்த்து காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள புண் ஆறும். சித்த மருத்துவத்தில் வயிற்று புண் ஆற்றும், அசீரணம் போக்கும் பெரும்பாலான மருந்துகளில் சீரகம் சேருவது குறிப்பிடத்தக்கது. சீரக சூரணம், ஏலாதி சூரணம், பஞ்ச தீபாக்கினி சூரணம் ஆகியன அவற்றில் சில. இவற்றை நாடுவதன் மூலமும் நலம் அடையலாம். மேலும் பித்த நாசினியான சீரகத்தையும், பித்தத்தை குறைக்கும் வில்வத்தையும் கொண்டு செய்யப்படும் சித்த மருந்தான 'சீரக வில்வாதி லேகியம்' கூட பித்தத்தை சீர்படுத்தும் தன்மை உடையது.

உடல் எடையைக் குறைக்க கிரீன் டீ-யைத் தேடும் ஆடம்பரம் நவீன வாழ்வியலில் பெருகிவிட்டது. நம் நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்ததன் விளைவு தான் இத்தகைய கிரீன் டீ போன்றவை நம் வாழ்வியலில் தலைதூக்கக் காரணம். அதற்கு மாற்றாக சீரகத்தை தண்ணீருடன் அவ்வப்போது கொதிக்க வைத்து குடித்து வர உடலில் கொழுப்பின் அளவு குறைந்து உடல் எடை குறையும். ஆதலால் சீரக தண்ணீரை 'ஏழைகளின் கிரீன் டீ' என்று சொன்னாலும் மிகையாகாது.

சீரகத்தின் மருத்துவ செயல்பாட்டிற்கு மிக முக்கிய வேதிப்பொருள் 'குமினால்டிஹைடு' என்று நவீன அறிவியல் கூறுகின்றது. மேலும் சீரகத்தின் விதைகள் ஊட்டச்சத்து நிறைந்தவையாக உள்ளன. புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வைட்டமின்கள் பி மற்றும் ஈ மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள், குறிப்பாக இரும்புச்சத்து, சீரக விதைகளில் கணிசமாக உள்ளன. மேலும் வைட்டமின் எ மற்றும் சி உள்ளதால் சீரகம் எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் உள்ளது.

சீரகத்தில் உள்ள இயற்கை நிறமிகளும் பல்வேறு தொற்றா நோய்களை வரவிடாமல் தடுக்கும் தன்மையுடையதாக உள்ளது. பொன்னிறத்தை உண்டாக்கும் இயற்கை நிறமிகள் புற்றுநோய் வருவதை தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. வயிறு மற்றும் குடல் சார்ந்த புற்றுநோய்களை வராமல் தடுப்பதாக எலிகளில் நிகழ்த்திய நவீன ஆய்வுகள் கூறுகின்றன.

அதிக ரத்த அழுத்த நிலையில் சீரகம் சேர்ந்த மருந்துகளை துணை மருந்தாய் எடுத்துக்கொள்ள நற்பலன் தரும். அல்லது சீரகத்தை எலுமிச்சை சாற்றில் ஊற வைத்து உலர்த்திப்பொடித்து பயன்படுத்தினாலும் நல்ல பலனைத்தரும். சீரகத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ள உடலில் எச்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பு குறைந்து எல்.டி.எல் எனும் நன்மை பயக்கும் கொழுப்பு அதிகமாவதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்வதால், சீரகம் இருதய நோயாளிகளுக்கும் ஆயுளை விருத்தி செய்யும்.

நீரிழிவு வியாதியிலும் சீரகம் நல்ல பலனை அளிக்கக்கூடியது. சீரகத்துடன் கொத்தமல்லி விதையான தனியாவை (ஒவ்வொன்றும் 500 மி.கி அளவு) சேர்த்து தயாரிக்கும் தேநீர் இன்சுலின் செயல்பாட்டை மூன்று மடங்காக அதிகரிக்கும்படியாக உள்ளதை வெளிநாட்டு நூல்கள் கூறுகின்றன. இது சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என்பது திண்ணம்.

எண்ணெய் குளியல் எனும் நமது பாரம்பரிய வழக்கு முறை நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை. அத்தகைய எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணையை சூடேற்றி அதிலும் சீரகம் போட்டு காய்ச்சி பயன்படுத்துவது நமது மரபு. இதனை 'அசை தைலம்' என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. இதனைக்கொண்டு வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ள பித்தத்தைக் குறைத்து நோய்கள் அணுகாது காக்கும்.

பித்த நோய்களை தவிர்த்து வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல், சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு, இருமல், வாய்ப்புண், வாயு தொல்லை, மலச்சிக்கல் போன்ற பல உடல் உபாதைகளுக்கும் சீரகம் மருந்தாக பயன்தரும் என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. உண்மையில் பாட்டி வைத்தியம் வெறும் வீட்டு வைத்தியம் என்றில்லாமல், அறிவியல் தன்மையோடு இருப்பது ஆதிக்க வர்க்கத்தால் மறைக்கப்பட்டுள்ளது. அத்தகைய அறிவியல் தன்மையை அறிந்துகொண்டு பயன்படுத்துவது நம் பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு பெருமை சேர்க்கும். ஆரோக்கியத்திற்கு கூடுதல் வலிமை சேர்க்கும்.

உலக அளவில் கிட்டத்தட்ட 90 சதவீதம் சீரகம் இந்தியாவில் தான் உற்பத்தி ஆகிறது. ஆனால் ஆரோக்கிய நாடுகளின் வரிசைப்பட்டியலில் இந்தியா பின்தங்கி இருக்கிறது. காரணம் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சீரகத்தை உலக நாடுகளுக்கு வாரி வழங்கிவிட்டு நாம் ஆரோக்கியத்தை தேடி மருத்துவமனை வாசலில் நிற்கும் அவலநிலை உள்ளது. எனவே மருத்துவகுணம் வாய்ந்த சீரகத்தை அன்றாட உணவில் அதிகம் பயன்படுத்த துவங்கினால், டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி ஆரோக்கிய நாடுகள் பட்டியலில் நாம் முன்னிலை பிடித்து உலகிற்கே முன்னுதாரணமாய் திகழ முடியும்.

தொடர்புக்கு:

drthillai.mdsiddha@gmail.com

Tags:    

Similar News