உண்மை எது

தாய்லாந்து சம்பவத்தை இந்தியாவில் நடந்ததாக சித்தரிக்கும் போலி வீடியோ

Published On 2023-07-24 11:22 GMT   |   Update On 2023-07-24 11:22 GMT
  • ஓசாயா என்பது தாய்லாந்து நாட்டை சேர்ந்த தேநீர் நிறுவனம்.
  • போலி வீடியோவில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் ஹோண்டா ஷோ ரூம் இரண்டும் இந்த அசல் வீடியோவில் தெரிகிறது.

தாய்லாந்து சம்பவத்தை இந்தியாவில் நடந்ததாக சித்தரிக்கும் போலி வீடியோ

"இந்தியாவில் புதிதாக கட்டப்பட்ட மெட்ரோ பாலம் ஒன்று இடிந்ததாக" சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. குறைவான நேரமே ஓடும் இந்த வீடியோவில் மேல்நிலை பாலம் ஒன்று உடைவது தெரிந்தது.

ஆனால், இது பொய்யான செய்தி என தெரிய வந்துள்ளது. நாடு முழுவதிலிருந்து எங்கும் பாலம் இடிந்ததாகவோ, உடைந்ததாகவோ செய்தி ஏதும் வரவில்லை.

அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது "பிடிடி ஸ்டேஷன்" (Ptt station) எனும் எழுத்துக்கள் மற்றும் ஒரு பெட்ரோல் பங்க் வாசலில் "ஒசாயா" (Ochaya) எனும் பெயர் கொண்ட பலகையும் தெரிந்தது.

ஓசாயா என்பது தாய்லாந்து நாட்டை சேர்ந்த தேநீர் நிறுவனம். எனவே இது தாய்லாந்து நாட்டு வீடியோ என ஊர்ஜிதமானது.

விசாரணையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் லுவாங் ஃபேங்க் (Luang Phaeng) சாலையில் 2020லிருந்து கட்டப்பட்டு வந்துள்ள லாட் கிராபாங் (Lat Krabang) மேம்பாலம் இடிவதும், அதில் 2 பேர் பலியானதும், 11 பேர் காயமடைந்ததும் தெரிய வந்துள்ளது.

ஒரு மிகப்பெரிய கான்கிரீட்டை தூக்கிச்சென்ற இயந்திரம் கோளாறானதில் இச்சம்பவம் நடந்துள்ளது. போலி வீடியோவில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் ஹோண்டா ஷோ ரூம் இரண்டும் இந்த அசல் வீடியோவில் தெரிகிறது.

இதன்மூலம், இந்தியாவின் மெட்ரோ குறித்து வெளியான பொய் வீடியோ, தாய்லாந்தின் கட்டுமானம் நிறைவடையாத ஒரு மேம்பால சாலையில் நடைபெற்ற விபத்து என தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News