உள்ளூர் செய்திகள்

வாலிபர்களை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார்

Published On 2022-10-25 08:09 GMT   |   Update On 2022-10-25 08:09 GMT
  • வாலிபர்களை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
  • இவர்கள் மீது கால்நடை திருடியதாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ராமர், லட்சுமணன். இவர்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதி பகுதியில் தோட்டம் உள்ளது.

இந்த இருவர் மற்றும் தந்தை மீது கால்நடை திருடியதாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் மலை அடிவாரப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வாலிபர்கள் இருவரும் சென்றனர். அங்கு வந்த வனத்துறையினரான பாரதி, பெரியசாமி உள்ளிட்ட 3 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை என்ற பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை பிரதான சாலையில் அமைந்துள்ள வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களை கட்டை மற்றும் கம்பிகளால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த 2 வாலிபர்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வாலிபர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் ராமர், லட்சுமணன் குடும்பத்தினர் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News