பள்ளி மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள்
- பள்ளி மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது
- வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பு
திருச்சி:
திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலை திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை ஒரு பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் தனிநபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம்.
மேலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 1.கவின்கலை-நுண்கலை, 2.இசை (வாய்ப்பாட்டு), 3.கருவி இசை 4.நடனம், 5.நாடகம், 6.மொழித்திறன் எனும் 6 தலைப்பின் கீழ் நடைபெறவுள்ளது.
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.கவின்கலை-நுண்கலை, 2.இசை (வாய்ப்பாட்டு), .கருவி இசை-தோற்கருவி, 4.கருவி இசை (துளைகாற்றுக்கருவிகள்), 5.கருவி இசை (தந்திக்கருவிகள்), 6.இசை சங்கமம், 7.நடனம், 8.நாடகம், 9.மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழ் நடைபெறவுள்ளது.
அதேபோல் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு 1.கவின்கலை-நுண்கலை, 2.இசை (வாய்ப்பாட்டு), 3.கருவி இசை, 4.நடனம், 5.நாடகம், 6.மொழித்திறன் உள்ளிட்ட 9 தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. ஒருவர் ஏதேனும் மூன்று தனிப்போட்டி மற்றும் இரண்டு குழுப்போட்டியில் மட்டுமே அதிக பட்சமாக பங்குபெற முடியும்.
பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வட்டார (முதலிடம்) அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட (முதலிடம் மற்றும் இரண்டாம் இடம்) அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் (முதலிடம்) மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
திருச்சி மாவட்டத்தில் கீழ்க்காணும் அட்டவணையின்படி கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும். பள்ளி அளவில் 23.11.2022 முதல் 28.11.2022-க்குள்ளும், வட்டார அளவில் 29.11.2022 முதல் 05.12.2022-க்குள்ளும், மாவட்ட அளவில் 06.12.2022 முதல் 10.12.202- க்குள்ளும், வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் பங்குபெறும் மாணவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
அனைத்து வகை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இக்கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க செய்ய பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.