உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சுதர்சன சக்கரத்துடன் வீற்றிருக்கும் வீரராகவப் பெருமாள்

Published On 2023-06-02 11:27 GMT   |   Update On 2023-06-02 11:27 GMT
  • செல்வங்கள் அருளும் கனகவல்லி தாயார் அபயஹஸ்த முத்திரையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
  • இடதுபுறத்தில் பூதேவி தாயார் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

திருப்பூர் :

திருப்பூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வீரராகவப் பெருமாள் கோவில். இக்கோவிலின் மூலவர் சயனக் கோலத்தில், தன்னை வணங்கும் பக்தர்களைப் பார்க்கும் வண்ணம் அருள்பாலிக்கிறார். புஜங்க சயனமாக தென்திசையில் சிரம் வைத்து, வட திசை திருப்பாதம் நீட்டி, மேற்குத் திசை முதுகு காட்டி, கிழக்குத் திசையில் திருமுகம் காட்டி, ஆனந்த நிலையில், நாடி வரும் பக்தர்களைப் பார்வையால் ஆட்கொள்ளும் அற்புதக் கோலம் வேறு எந்தக் கோவிலிலும் காணாத அரிதான திருக்கோலம்.

கனகவல்லி தாயார், பூதேவி தாயார் இருவரும் இரண்டு தனித்தனி கருவறை, விமானங்கள் கூடிய தனித்தனி சன்னதிகள் கொண்டு அருள்பாலிக்கின்றனர். பெருமாளுக்கு வலது புறத்தில், சிரசுப் பகுதியில் செல்வங்கள் அருளும் கனகவல்லி தாயார் அபயஹஸ்த முத்திரையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இடதுபுறத்தில் பூதேவி தாயார் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

பழங்காலத்தில் மூலவர் மற்றும் இருபுறமும் தாயார்களுக்கு சிறிய அளவிலான விமானங்களுடன் கூடிய கற்கோவில் இருந்துள்ளது. பழைய தூண்கள், மேற்கூரைகள் இயற்கை சீற்றங்களால் சிதிலமடைந்திருக்கலாம் என செவிவழிச் செய்தி உள்ளது. பழைய கோவிலுக்கு பதிலாக 1939ல் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நரசிம்மர் தூண் மற்றும் அதில் இடம் பெற்றுள்ள சிற்பங்களை ஆய்வு செய்ததில், ஏறத்தாழ 12ம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது தொல்லியல் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. பெருமாள் கோவிலுக்கு, மைசூர் மன்னரால் 345.35 ஏக்கர் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டது குறித்து செப்புப் பட்டயங்கள் மூலம் தெரியவருகிறது. பின்னர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

தனி சன்னதியில் ஆஞ்சநேயர் மிகவும் பழமையான புடைப்புச் சிற்பமாக எழுந்தருளியுள்ளார். திருமாலுக்கு உரிய புனிதம் வாய்ந்த ஆயுதங்கள் ஐந்தில் ஒன்றான சுதர்சனம் எனப்படும் சக்கரம், சிவபெருமானது சக்தி மற்றும் அவரது அக்னி இணைந்து உருவாக்கப்பட்டது. சுதர்சன சக்கரத்துடன் பெருமாள் இங்கு அருள்பாலித்து வருகிறார்.

வைகுண்ட ஏகாதசி, வைகாசி விசாகத் தேர்த் திருவிழா, புரட்டாசி உதய கருடசேவை, ராமநவமி, பங்குனி உத்திரம், பிரம்மோற்சவம், ஆடிப் பூரம், வரலட்சுமி பூஜை, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, அம்பு சேவை, கார்த்திகை தீபம், கூடாரவல்லி உற்சவம், அனுமன் ஜெயந்தி ஆகியவை இக்கோவிலின் முக்கிய திருவிழாக்கள் ஆகும். 

Tags:    

Similar News