உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பருவமழை இல்லாததால் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

Published On 2023-09-10 07:19 GMT   |   Update On 2023-09-10 07:19 GMT
  • நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் மரக்கன்று நடவு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வனத்துறை நர்சரியில் உற்பத்தி செய்யப்பட்டு, இலவசமாக நடவு செய்து தரப்படுகிறது.

தாராபுரம் : 

தமிழ்நாடு உயிர் பன்முகத்தன்மை மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் மரக்கன்று நடவு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென அந்தந்த பகுதிகளின் மண் வளம், நில அமைப்புக்கேற்ற மரக்கன்றுகள், அந்தந்த பகுதியில் உள்ள வனத்துறை நர்சரியில் உற்பத்தி செய்யப்பட்டு, இலவசமாக நடவு செய்து தரப்படுகிறது.

கடந்த ஜூலையிலேயே இத்திட்டம் நடைமுறைக்கு வரவேண்டிய நிலையில் எதிர்பார்த்த பருவமழை இல்லாததால் தற்போது மரக்கன்றுகளை நடவு செய்ய வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பக கட்டுப்பாட்டில் உள்ள தாராபுரம் நர்சரியில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வனத்துறையினர் கூறுகையில், நன்கு வளர்ந்த நிலையில் சந்தனம், தேக்கு, மகாகனி, சவுக்கு மற்றும் மலை வேம்பு மரக்கன்றுகள் உள்ளன. அவை இலவசமாகவே நடவு செய்து தரப்படும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், அரசு நிலங்களில் மரம் வளர்க்க விரும்புவோர், திருப்பூர் வனச்சரக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.விருப்பம் தெரிவிப்போரின் இடத்திற்கு நேரில் வந்து, அங்கு மரம் வளர்ப்பதற்கான சூழல் உள்ளதா என, கள ஆய்வு செய்த பின் மரக்கன்றுகள் நடவு செய்து கொடுக்கப்படும். 40 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன என்றனர்.

Tags:    

Similar News