உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் யானைகளுக்கு பயந்து கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு

Published On 2023-05-16 10:01 GMT   |   Update On 2023-05-16 10:01 GMT
  • ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்
  • வாட்ஸ் ஆப் குழு அமைத்து பின் தொடரும் வாலிபர்கள்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை அடிவாரத்தில் 2 யானைகள் சுற்றி திரிகின்றன. நேற்று இரவு 9 மணியளவில் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பாரத கோவில் வழியாக சந்தைக்கோடியூர் ஏரி கரையின் மீது நடந்து சென்றது.

மின்சாரம் துண்டிப்பு

இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொது மக்கள் உடனடியாக சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் முன் கூட்டியே மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

போலீசாரும் ஒலி பெருக்கி மூலம் அனைவரும் வீட்டிற்குள் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். யாரும் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் நேற்று இரவு 9 மணியளவில் சந்தைக்கோடியூர் வக்கணம்பட்டி புது ஓட்டல் தெரு ஏலகிரி கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின்சாரம் இருந்தால் அதன் வெளிச்சம் இருக்கும் இடத்தை நோக்கி யானை ஊருக்குள் வந்து விடும் என்று எண்ணி நேற்று இரவு மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு சந்தைக்கோடியூர் பகுதியில் இருந்து சக்கரகுப்பம் வழியாக வக்கணம்பட்டி மாரியம்மன் கோவில் ஆலயம் எதிரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றியம் துவக்க பள்ளி எதிரே 2 யானைகள் முகாமிட்டுள்ளது.

இரவு நேரத்தை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலர் யானையை பின் தொடர்ந்தனர். ஆபத்தான நிலையில் தங்களது செல் போனில் வீடியோ எடுத்து யானை வருது உஷார் என வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்து அதில் பதிவு செய்து வருகின்றனர்.

பொது மக்கள் தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் யானைகள் ஆலங்காயம் காட்டு பகுதிக்கு சென்று விடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News