உள்ளூர் செய்திகள்

புனல்காடு குப்பை கொட்டும் பிரச்சினையில் வேறு இடம் தேர்வு செய்ய பேச்சுவார்த்தை

Published On 2023-05-31 09:19 GMT   |   Update On 2023-05-31 09:19 GMT
  • கலெக்டர் உள்பட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்
  • அனைத்து உட்கட்டமைப்புகளுடன் பாதிப்பு இல்லாத வகையில் அங்கேயே குப்பை கிடங்கு அமைக்கப்படும்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே புனல்காடு கிராமத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணா நுழைவு வாயில் பகுதியில் இருந்து ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலகம் அருகே மீண்டும் அவர்களை தடுக்க முயன்றதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்கள் முன்னேறிச் சென்று கலெக்டர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகளும் பொதுமக்கள் தரப்பை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் பொதுமக்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து பொதுமக்கள் தரப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

வேறு இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க தயாராக இருப்பதாகவும், இதற்காக இடங்கள் தேடும் பணியை வருவாய்த்துறையினர் மேற்கொள்வார்கள் என்று ஆலோசிக்கப்பட்டது.

அதேவேளையில் வேறு இடம் இருந்தால் கூறலாம் என்றும் எங்களிடமும் யோசனை கேட்டுள்ளனர்.

ஒருவேளை இடம் கிடைக்காத பட்சத்தில் பாதுகாப்பான முறையில் தேவையான அனைத்து உட்கட்டமைப்புகளுடன் பாதிப்பு இல்லாத வகையில் அங்கேயே குப்பை கிடங்கு அமைக்கப்படும் என்றும் இதுதொடர்பாக எங்களின் கருத்துகளும் பரிசீலிக்கப்படும் என்றும், அதுவரை 10 நாட்களுக்கு அந்த பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறும் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News