உள்ளூர் செய்திகள்

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி

Published On 2023-05-31 09:17 GMT   |   Update On 2023-05-31 09:17 GMT
  • உரிமையாளரின் மனைவியை தாக்க முயற்சி
  • வாக்குவாதம் முற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வேங்கிக்காலில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை தொடங்கி பொதுமக்களிடம் சீட்டு நடத்தி பணம் பெற்று வந்தனர்.

நிறுவனத்தில் அதிகப்படியான மக்களை சேர்ப்பதற்காக தையல் பயிற்சி, அழகுகலை பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தி பெண்களிடம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவற்கான ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

மேலும் பலரை பல்வேறு மாவட்டங்களில் ஒருங்கிணைப்பா ளர்களாகவும், முகவர்களாகவும் நியமித்து பொதுமக்களிடம் பணத்தை பெற்றுள்ளனர்.

ரூ.50 முதல் ரூ.300 வரை செலுத்தினால் தங்கமூக்குத்தி, அதற்கு மேல் செலுத்தினால் புடவை, ஆடுகள் உள்ளிட்ட வழங்குதவது போன்ற பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

அதன்படி முகவர்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து அதிகப்படியான பணத்தை பெற்றனர். முகவர்கள் தங்கள் பகுதியை சேர்ந்த ஏராளமானவர்களை இத்திட்டத்தில் சேர்த்து பணத்தை பெற்றனர்.

திடீரென நிதி நிறுவனத்தை நடத்தி வந்த நிர்வாகி தலைமறைவாகி விட்டார். பணத்தை கொடுத்த பொதுமக்களும், வாங்கிக்கொடுத்த முகவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பணத்தை செலுத்திய பொதுமக்கள் முகவர்களிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தவரின் மனைவி மற்றும் உறவுக்கார பெண் ஆகியோர் திருவண்ணாமலை உள்ளதாக முகவர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்றுமுன்தினம் முகவர்கள் நிறுவன உரிமையாளர் மனைவி மற்றும் உறவுக்கார பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்ய தாலுகா போலீசாருக்கு அறிவுறுத்தினர். அதன்படி போலீசார் விரைந்து சென்று நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் உறவுக்கார பெண் ஆகியோரை மீட்டு கிரிவலப்பாதையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இந்த தகவல் அறிந்ததும் ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முகவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.

அப்போது முகவர்கள் அனைவரும், நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் உறவுக்கார பெண்ணிடம் பணத்தை திருப்பி தர கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Tags:    

Similar News