உள்ளூர் செய்திகள்

தேர் செல்ல வசதியாக சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்- வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்

Published On 2023-05-15 14:50 IST   |   Update On 2023-05-15 14:50:00 IST
  • மறைமலைநகரை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.
  • தேர் செல்லும் பாதையில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளதால் தேரோட்டத்தின் போது சிரமம் ஏற்படும் நிலை இருந்தது.

வண்டலூர்:

மறைமலைநகரை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் தேரோட்டம் வருகிற 30-ந்தேதி நடைபெற இருக்கிறது. அப்போது தேர் அனுமந்தபுரம் சாலையில் சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடையும்.

தற்போது தேர் செல்லும் பாதையில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளதால் தேரோட்டத்தின் போது சிரமம் ஏற்படும் நிலை இருந்தது.

இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் வெங்கடேசன் புகார் அளித்தார். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைகளுக்கு ஏற்கனவே நோட்டீசும் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து இன்று காலை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கோமதி தலைமையில் அதிகாரிகள் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை ஜே.சி.பி.எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

இதுபற்றி அறிந்ததும் ஏராளமான வியாபாரிகள் குவிந்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 நாட்கள் அவகாசம் கேட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

Similar News