உள்ளூர் செய்திகள்
சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை படத்தில் காணலாம்.

தி.மு.க.வை வீழ்த்த ஒற்றை தலைமை தேவை: சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பரபரப்பு போஸ்டர்கள்

Published On 2022-06-16 10:20 IST   |   Update On 2022-06-16 10:20:00 IST
  • தலைமை பதவியை பிடிக்க 2 தரப்பினரும் தங்களது தலைவர்களுக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
  • இன்று சேலம் வரும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

சேலம்:

சென்னையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க.வை ஒற்றை தலைமையில் கீழ் கொண்டு வர வேண்டும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் தற்போது கட்சியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வருகிற 23-ந் தேதி கூட உள்ள பொதுக்குழுவுக்கு முன்பாக பழனிசாமியை முன்னிலைபடுத்த அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு இந்த கோஷத்தை கிளப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு போட்டியாக இதுவரை விட்டு கொடுத்தது போதும் இம்முறை விட்டு கொடுக்க கூடாது என்று ஒ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் களத்தில் இறங்கி உள்ளனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதே போல ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.

மேலும் தலைமை பதவியை பிடிக்க 2 தரப்பினரும் தங்களது தலைவர்களுக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதில் பழனிசாமி சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் சாதாரண அ.தி.மு.க. தொண்டனின் விருப்பம் ஒற்றை இலக்கு, தி.மு.க.வை வீழ்த்துவது, ஒற்றை தலைமை எடப்பாடி ஐயா, கழகம் வாழ்வது யாரால், கழகம் வீழ்ந்தது எவரால், தொண்டர்களே சிந்தியுங்கள் என்று சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது . இதனால் இந்த போஸ்டர் விவகாரம் தற்போது மேலும் சூடு பிடித்துள்ளது.

இதற்கிடையே இன்று சேலம் வரும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. இதனால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News