உள்ளூர் செய்திகள்

நீரில் மூழ்கி இறந்த மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4-வது நாளாக போராட்டம்

Published On 2024-01-17 10:17 GMT   |   Update On 2024-01-17 10:17 GMT
  • கடந்த 14-ந்தேதி தோட்டத்திற்கு பூப்பறிக்க சென்ற அனிதா, அங்குள்ள பள்ளமடை குளத்தின் மறுகால் தண்ணீர் செல்லும் ஊருணியில் பிணமாக மிதந்தார்.
  • சிறுமி அனிதா வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஊருணியில் மூழ்கி இறந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள பள்ளமடை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 41).

இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் திருவாளி முத்து(14) என்ற மகனும், அனிதா(13) என்ற மகளும் உள்ளனர். அனிதா அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 14-ந்தேதி தோட்டத்திற்கு பூப்பறிக்க சென்ற அனிதா, அங்குள்ள பள்ளமடை குளத்தின் மறுகால் தண்ணீர் செல்லும் ஊருணியில் பிணமாக மிதந்தார். இதையடுத்து மானூர் போலீசார் அவரது உடலை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் குளத்தில் அதிக தண்ணீர் தேக்கி வைப்பதற்காக, அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் தண்ணீர் அதிக அளவு வெளியேறி சிறுமி அனிதா வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஊருணியில் மூழ்கி இறந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மணல் மூட்டைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு வெள்ள நிவாரண தொகை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 4-வது நாளாக அனிதாவின் உறவினர்கள் பள்ளமடை கிராமத்தில் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் மானூர் தாசில்தார் முருகன், இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News