உள்ளூர் செய்திகள்

கோவை கார் வெடிப்பு- என்.ஐ.ஏ. விசாரணை இன்று தொடங்கியது

Published On 2022-10-30 06:31 GMT   |   Update On 2022-10-30 06:31 GMT
  • கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு புதிதாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • என்.ஐ.ஏ. அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றை பரிசோதித்து விசாரணையின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினர்.

கோவை:

கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ந்தேதி அதிகாலையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான்.

போலீசார் நடத்திய விசாரணையில் கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக இறந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் இறந்த முபின் மற்றும் கைதானவர்கள் 3 கோவில்களை தகர்க்க ஒத்திகை பார்த்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

இதுவரை இந்த வழக்கினை கோவை மாநகர போலீசாரால் அமைக்கப்பட்ட 7 தனிப்படை போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர்.

தற்போது இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. தென் மண்டலங்களுக்கான டி.ஐ.ஜி.வந்தனா தலைமையிலான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு போலீசாருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, இதுவரை விசாரணை நடத்தி வந்த கோவை போலீசார் தாங்கள் சேகரித்த ஆவணங்களை என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தனர்.

கார் வெடிப்பு தொடர்பான அனைத்து ஆவணங்கள், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையின் அறிக்கைகள், கைப்பற்றப்பட்ட பொருட்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றையும் ஒப்படைத்தனர்.

கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு புதிதாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றை பரிசோதித்து விசாரணையின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினர்.

போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்றுக்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தங்களது விசாரணையை தொடங்கினர்.

இன்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இருந்து காரில், கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு செல்கின்றனர்.

அங்கு கார் வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். பின்னர் கோவிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.

தொடர்ந்து கோவில் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, கூடுதல் தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனை மேற்கொள்ள உள்ளனர்.

தொடர்ந்து கார் வந்த இடமான உக்கடத்தில் இருந்து கோட்டைமேடு பகுதி வரையிலும் ஆய்வு மேற்கொள்கின்றனர். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரின் வீடுகளுக்கும் சென்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

மேலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதான 6 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுதவிர இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெரோஸ், இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் இருந்த ரசித் அலி, முகமது அசாருதீனை சந்தித்துள்ளார். இது தொடர்பாக இவர்களை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கி உள்ளதால் இந்த வழக்கில் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News