உள்ளூர் செய்திகள்

காய்ச்சல்-சிறுநீரக தொற்றால் பாதிப்பு: நல்லக்கண்ணுவுக்கு தீவிர சிகிச்சை

Published On 2022-10-02 04:44 GMT   |   Update On 2022-10-02 04:44 GMT
  • நல்லக்கண்ணுவுக்கு எந்த வகை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க அவரது ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
  • நல்லக்கண்ணுவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு 97 வயதாகிறது. இவருக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நல்லக்கண்ணுவுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு சிறுநீரக தொற்று பாதிப்பும் இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று பாதிப்புக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் 2-வது நாளாக நல்லக்கண்ணுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நல்லக்கண்ணுவுக்கு எந்த வகை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க அவரது ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் தேரணி ராஜன் இன்று காலை கூறும்போது,

பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே எந்தவகை காய்ச்சலால் நல்லக்கண்ணு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவரும் என்று கூறினார்.

Tags:    

Similar News