உள்ளூர் செய்திகள்

விலையை உயர்த்த கேட்டு சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் கருப்பு கொடி கட்டி போராட்டம்

Published On 2023-03-17 10:29 IST   |   Update On 2023-03-17 10:29:00 IST
  • சேலம் மாவட்டத்தில் ஆவினுக்கு மட்டும் தினசரி 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது.
  • ஆவின் நிறுவனத்தில் கையிருப்பு உள்ள பால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதால் இன்று பெரிய அளவில் பால் தட்டுப்பாடு இல்லை.

சேலம்:

பால் உற்பத்தியாளர்கள், தீவனங்கள் விலை உயர்ந்துள்ளதால் பால் விலையை உயர்த்தி தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் தனியார் பால் விலையைவிட ஆவின் பால் கொள்முதல் விலை 10 ரூபாய் குறைவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு 35 ரூபாயும், எருமை பாலுக்கு 44 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதனை பசும்பாலுக்கு ரூ.42 ஆகவும், எருமைப்பாலுக்கு ரூ.52 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் விலையை உயர்த்தாவிட்டால் பால் உற்பத்தியாளர்கள் பாலை வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்தனர்.

இதை அடுத்து சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பால் வளத்துறை அமைச்சர் நாசர், பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் இன்று முதல் தொடரும் எனவும், ஆவினுக்கு பாலை அளிக்காமல் தனியாருக்கு அளிப்போம் என்றும் கூறினார்.

இதை அடுத்து இன்று தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் ஆவினுக்கு மட்டும் தினசரி 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது. இன்று 30 சதவீத விவசாயிகள் பாலை ஆவினுக்கு வழங்காமல் புறக்கணித்தனர். அவர்களை அதிகாரிகள் சந்தித்து சமாதானப்படுத்தி வருகிறார்கள்.

ஆவின் நிறுவனத்தில் கையிருப்பு உள்ள பால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதால் இன்று பெரிய அளவில் பால் தட்டுப்பாடு இல்லை. ஆனால் தொடர்ந்து பால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் பால் விநியோகம் முற்றிலும் பாதிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாழப்பாடியில் உள்ள புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கருப்புக் கொடி கட்டப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பால் விலையை அரசு உயர்த்தி தரவிட்டால் வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்தி பால் வினியோகத்தை முற்றிலும் நிறுத்த உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

எனவே அரசு உடனடியாக அவர்களை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், வீரபாண்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் பால் உற்பத்தியாளர்கள் குறைந்த அளவிலேயே ஆவினுக்கு இன்று பால் விநியோகம் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் பால் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Tags:    

Similar News