திருவள்ளூரில் மது வாங்கித்தர மறுத்த தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்
- திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், செங்கல் வராயன் தெருவைச் சேர்ந்தவர் பிரபு.
- பிரபு திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், செங்கல் வராயன் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (30). கூலித் தொழிலாளியான பிரபு நேற்று திருவள்ளூர் நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய குப்பம், கற்குழாய் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார்.
கற்குழாய் சாலைப் பகுதியில் சைக்கிள் ஸ்டேண்ட் நடத்தி வரும் லாரன்ஸ் என்கிற அரவிந்த் (34) என்பவர் பிரபுவை மடக்கி மது வாங்கித் தரவேண்டும் என கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் இல்லை என பிரபு கூறியதால் தகாத வார்த்தைகளால் பேசி, லாரன்ஸ் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் பிரபுவை அடித்துள்ளார்.
மேலும் பிரபு கொண்டு வந்த இரு சக்கர வாகனத்தை, இது திருட்டு வாகனம் என்னிடம் கொடுத்து விட்டு ஓடிவிடு என்றும் இல்லையேல் அடித்து கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இது குறித்து பிரபு திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஏ. சுசீலா வழக்குப் பதிவு செய்து லாரன்சை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.