மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை ரெயிலில் இருந்து தள்ளி செல்போன் பறிப்பு
- மர்ம நபர் ஒருவர் விவேக்கின் செல்போனை பறித்து கீழே தள்ளினார்.
- மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு துரிதமாக உதவிய சமூக ஆர்வலர் வெங்கடேசனை பொது மக்களும் ரெயில்வே போலீசாரும் வெகுவாக பாராட்டினர்.
ராயபுரம்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விவேக் குமார் (24) சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.
பணி நிமித்தமாக மதுரை சென்று பின்னர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து விஜயவாடா செல்லக்கூடிய கோர மண்டல் விரைவு ரெயிலில் பயணம் செய்தார்.
கொருக்குப்பேட்டை ஹரி நாராயணபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது விவேக் குமார் ரெயிலின் கதவு ஓரத்தில் செல்போன் பேசி கொண்டு இருந்தார்.
அப்போது தீடீரென மர்ம நபர் ஒருவர் விவேக்கின் செல்போனை பறித்து கீழே தள்ளினார். கீழே விழுந்த விவேக் தனது செல்போனை திருடி சென்றதாகவும், தனது உடமைகள் சான்றிதழ்கள் ரெயிலில் இருப்பதாகவும், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேசனிடம் கூறினார்.
அவர் இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ஓங்கோல் பகுதியில் ரெயில்வே போலீசார் விவேக் உடமைகளை எடுத்து வைத்து அவரிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சிறிது தூரத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே சத்தம் கேட்கவே அதனையும் எடுத்து அவரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து விவேக் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஓங்கோல் சென்று உடமைகளை எடுத்து கொண்டு பின்னர் விஜயவாடாவுக்கு சென்றார்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு துரிதமாக உதவிய சமூக ஆர்வலர் வெங்கடேசனை பொது மக்களும் ரெயில்வே போலீசாரும் வெகுவாக பாராட்டினர். மேலும் இச்சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் விவேக்குமார் புகார் செய்துள்ளார்.