உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 பஞ்சாயத்துகளில் 26-ந்தேதி கிராமசபை கூட்டம்

Published On 2023-01-21 06:35 GMT   |   Update On 2023-01-21 06:35 GMT
  • கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
  • பொது மக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு- செலவு கணக்குகளை வைக்க வேண்டும்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் குடியரசு தினமான வருகிற 26-ந்தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும். மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் மற்றும் இதர திட்டம் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும். பொது மக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு- செலவு கணக்குகளை வைக்க வேண்டும்.

குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும். குறிப்பாக அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற வேண்டும். தேசிய கொடியை ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றுவதை தடுக்கும் வகையில் செயல்பட்டால் அவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராம ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை இருந்தால் காஞ்சிபுரம் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள 044-27237175, 740 260 6005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News