உள்ளூர் செய்திகள்

25 கி.மீ. தூரத்தை 1½ மணி நேரத்தில் கடக்காத லாரி டிரைவருக்கு ரூ.500 அபராதம்- வனத்துறையினர் நடவடிக்கை

Published On 2022-06-24 15:32 IST   |   Update On 2022-06-24 15:32:00 IST
  • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டை ஊசி வளைவுகளில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் திரும்ப முடியாமலும், பழுதாகி நிற்பதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
  • இதனால் தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் வனத்துறையினர் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் இந்த வழியாக செல்வதற்கு தடை செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கிட்டு தீர்ப்பானது.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை. இரு மாநில எல்லையை கடக்கும் தேசிய நெடுஞ்சாலை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள், 3 சோதனைச் சாவடிகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டை ஊசி வளைவுகளில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் திரும்ப முடியாமலும், பழுதாகி நிற்பதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

இதனால் தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் வனத்துறையினர் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் இந்த வழியாக செல்வதற்கு தடை செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கிட்டு தீர்ப்பானது.

இதற்கிடையே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து காரப்பளம் சோதனை சாவடி வரை சுமார் 25 கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதியை 1½ மணி நேரத்தில் வாகனங்கள் கடக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை கோவையில் இருந்து மைசூருக்கு அட்டை பாரம் ஏற்றி சென்ற லாரி சரியான நேரத்தில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி கடக்கவில்லை என வனத்துறையினர் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

இது பற்றி வாகன ஓட்டுனர்கள் கூறியதாவது:-

சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி சோதனைசாவடியை கடக்க 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் நாங்கள் முதல் கியரில் மட்டுமே வாகனத்தை இயக்க முடியும். மேலும் அதிக வேகத்தடைகளும் உள்ளன. 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து வனப்பகுதியில் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல முடியாது.

இதில் எங்களது வாகனம் டயர் பஞ்சர் ஆனாலும், வேறு ஏதாவது பழுதானாலும் நாங்கள் எப்படி 1½ மணி நேரத்தில் காரப்பளம் சோதனை சாவடியை கடக்க முடியும். 10 நிமிடம் தாமதமாக வந்ததால் ரூ.500 அபராதம் விதிக்கின்றனர். எங்களுக்கு ஒரு லோடு மூலம் ரூ.800 முதல் ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது.

மேலும் நுழைவு கட்டணமாக பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.50 வசூலிக்கின்றனர்.

இந்நிலையில் இவர்கள் வேகமாக வாருங்கள் என்கிறார்கள். ஆனால் பாரம் ஏற்றி எப்படி வேகமாக வருவது. இடையில் வன விலங்குகள் தடை ஏற்பட்டால் அதற்கு தகுந்தாற் போல் தான் வாகனத்தை இயக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News