வெடி விபத்து நடந்த கிணற்றை படத்தில் காணலாம்.
ஆலங்குளத்தில் கிணறு தோண்டும்போது வெடி வெடித்து 3 பேர் பலி
- பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக இன்று காலை டெட்டனேட்டர் வைத்து சோதனை செய்துள்ளனர்.
- எதிர்பாராதவிதமாக டெட்டனேட்டர் வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை அடுத்த அய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்.
இவரிடம் ஆனையப்பபுரத்தை சேர்ந்த அரவிந்த், ஆலங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் உள்ளிட்ட 5 பேர் கிணறு வெட்டும் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் ஆலங்குளம் அருகே ராம்நகர்-புதுப்பட்டி சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் புதுப்பட்டியை சேர்ந்த பால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில நாட்களாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று காலை பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் வைத்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக டெட்டனேட்டர் வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் (வயது 21) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே கிணற்றின் மேல் பகுதியில் நின்று கொண்டிருந்த சக தொழிலாளிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க போராடினர். தகவல் அறிந்து ஆலங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்த ஆசீர் சாம்சன் உள்பட 2 பேர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய மேலும் 2 பேரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.