உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை ரூ.88ஆக சரிவு

Published On 2023-01-19 09:12 IST   |   Update On 2023-01-19 15:26:00 IST
  • நாமக்கல்லில் இருந்து தினமும் 4 கோடிக்கு அதிகமான முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • குறிப்பாக வெளிநாடுகளுக்கு மட்டும் மாதத்திற்கு 10 கோடி முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் ஆகிய பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் 30 லட்சம் கிலோவுக்கு மேல் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு முன்பு பல்லடத்தில் கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பண்ணை கொள்முதல் விலை ரூ.102 ஆக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் கறிக்கோழி விலையில் கிலோவுக்கு ரூ.14 குறைத்து முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அதன்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.88 ஆக இன்று நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்கிடையே நாமக்கல்லில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் கடந்த 14-ந் தேதி முதல் ரூ.87 ஆக இருந்த முட்டை கொள்முதல் விலையை, ரூ.5 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை கோழி விலை ரூ.92 ஆக உயர்ந்து உள்ளது.

நாமக்கல்லில் இருந்து தினமும் 4 கோடிக்கு அதிகமான முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக வெளிநாடுகளுக்கு மட்டும் மாதத்திற்கு 10 கோடி முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது.

இதனால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் முதல்முறையாக கடந்த 9-ந் தேதி, ஒரு முட்டையின் விலை 565 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த விலை தற்போது வரை மாற்றமில்லாமல் அப்படியே நீடிக்கிறது.

இதனால் சில்லறை கடைகளில் ரூ.6.50 வரை முட்டைகள் விற்பனையாகிறது. இதனால் முட்டை நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் முட்டை விலை உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

Similar News