உள்ளூர் செய்திகள்

கறிக்கோழி கொள்முதல் விலை 103 ரூபாயாக உயர்வு: முட்டை விலை 535 காசுகளாக நிர்ணயம்

Published On 2022-11-17 04:43 GMT   |   Update On 2022-11-17 04:43 GMT
  • பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
  • கடந்த 1-ந்தேதி கொள்முதல் விலை ரூ.115 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

நாமக்கல்:

தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

இங்கு தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி கடந்த 1-ந்தேதி கொள்முதல் விலை ரூ.115 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் 5-ந் தேதி ரூ.106-ஆக சரிந்தது. 14-ந் தேதி மேலும் 10 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.96-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 98 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ ரூ.103-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது,

கறிக்கோழி ஒரு கிலோ உற்பத்தி செய்வதற்கு ரூ.105 செலவாகிறது. அதற்கு மேல் கொள்முதல் விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே பண்ணையாளர்களுக்கு லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது ரூ.103 என விலை நிர்ணயம் செய்தாலும் ரூ.95-க்கு கோழிகளை பிடிக்கின்றனர். ஒரு கிலோவுக்கு ரூ.8 இழப்பு ஏற்படுகிறது.

கார்த்திகை மாதம் தொடங்கி உள்ளதால் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பர். அதனால் முன்கூட்டியே இவற்றை எதிர்பார்த்து 20சதவீதம் வரை உற்பத்தியை நிறுத்தி விட்டனர். அதன் காரணமாக வாரம் 2.50 கோடி கிலோ உற்பத்தி செய்த நிலையில் தற்போது 2 கோடி கிலோ கறிக்கோழி மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது என்றார்.

இதற்கு இடையே நாமக்கல் மண்டல முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நேற்று நாமக்கல்லில் நடந்தது. இந்த கூட்டத்தில் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள முட்டை விலை நிலவரம் மற்றும் அதன் தேவை குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் முட்டைக்கு 5 காசுகள் உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் 530 காசுகளாக இருந்த முட்டையின் விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு 535 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் முட்டை 6 ரூபாய் 50 காசு வரை விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News