உள்ளூர் செய்திகள்

சிக்கன் பிரியாணி விலை ரூ.60 அதிகரிப்பு

Published On 2023-12-07 09:56 GMT   |   Update On 2023-12-07 09:56 GMT
  • 6 முட்டைகள் கொண்ட பெட்டி 30 ரூபாய்க்கு பதில் 50 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • ஓட்டல்களில் சைவ உணவுகளில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.

மிச்சாங் புயல் மழை காரணமாக சென்னையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கிறது.

காய்கறி வரத்து குறைந்ததால் பெரும்பாலான காய்கறி விலை உயர்ந்துள்ளது. மழையை காரணம் காட்டி பொருட்கள் எடுத்து வரும் சரக்கு வாகனங்கள் கட்டணத்தை உயர்த்தி உள்ளன.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி எடுத்து வரும் லாரிகளின் வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் இருந்து சில்லரை வியாபாரத்திற்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படும் வாடகை கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

வழக்கமாக வாடகை கட்டணம் ரூ.500 வசூலிக்கப்படும் இடத்தில் 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அது போல முட்டை விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 6 முட்டைகள் கொண்ட பெட்டி 30 ரூபாய்க்கு பதில் 50 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இத்தகைய காரணங்களால் சென்னையில் சில இடங்களில் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சில ஓட்டல்களில் பால் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஓட்டல்களில் சைவ உணவுகளில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால் அசைவ உணவு கடைகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சிக்கன் பிரியாணி விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக ரூ.240-க்கு விற்பனையாகும் சிக்கன் பிரியாணி புயல் மழை பாதிப்பால் பொருட்கள் கிடைக்காததால் பார்சலுக்கு ரூ.300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிக்கன் பிரியாணி விலை சராசரியாக 60 ரூபாய் உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News