அம்மாபேட்டை அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமிரா பொருத்தம்
- சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தனர்.
- கண்காணிப்பு கேமிராக்கள் வைத்து மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க தீவிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் அவ்வப்போது ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்று வருவதாக சென்னம்பட்டி வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வெள்ளித்திருப்பூர் குரும்பனூர்காடு ஈசாக்கு தோட்டப்பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி, சகுந்தலா தம்பதியர். இவர்கள் சென்னம்பட்டி வனச்சரக்கத்தை ஒட்டியுள்ள பகுதியில் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டின் அருகே சத்தம் கேட்டதால் தம்பதியினர் வெளியே வந்து பார்த்தபோது வீட்டில் முன்புறத்தில் கட்டியிருந்த 2 வெள்ளாடுகள் காணவில்லை. பதறி அடித்து தேடிய போது காட்டிற்குள் வெள்ளாடுகள் ஆங்காங்கே மர்ம விலங்கு கடித்து உயிரிழந்து கிடந்தது.
இதுகுறித்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு வந்து வனத்துறையினர் பார்வையிட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஆடுகளை கடித்து குதறிய விலங்கின் கால் தடங்களை பார்க்கும் போது சிறுத்தையின் கால் தடம் போல் இருக்கிறது என்றும், ஆய்வுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் அதன் பின் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.
மேலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் வைத்து மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க தீவிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.