வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்தி அசத்திய போலீசார்
- தோழிகளான சக பெண் காவலர்கள் சந்தனம், குங்குமம் இட்டு, கைநிறைய வளையல் போட்டு, சீர்வரிசை தட்டு, தாம்பூலம் கொடுத்தனர்.
- வளைகாப்பு நிகழ்ச்சியில், வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோரும் பங்கேற்று மோகனாவை வாழ்த்தினர்.
வாழப்பாடி:
சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் அடுத்த பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகனா (வயது 27). இவர் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
கர்ப்பிணியான இவரை மகிழ்விக்க, வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் ஒன்றிணைந்து வளைகாப்பு நடத்திட திட்டமிட்டனர்.
அதன்படி, நேற்று காவலர் மோகனாவை வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். பின்பு அவருக்கு தோழிகளான சக பெண் காவலர்கள் சந்தனம், குங்குமம் இட்டு, கைநிறைய வளையல் போட்டு, சீர்வரிசை தட்டு, தாம்பூலம் கொடுத்தனர். இதையடுத்து மோகனாவுக்கு அறுசுவை விருந்து கொடுத்து மகிழ்ந்தனர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த மோகனா சக போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோரும் பங்கேற்று மோகனாவை வாழ்த்தினர்.
பெண் காவலருக்கு போலீஸ் நிலையத்திலேயே, சக பெண் போலீசார் வளைகாப்பு நடத்திய நிகழ்வு, பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.