நிர்பயா நிதியின் கீழ் 26 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா
- ரெயில்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் படிப்படியாக பொருத்தப்பட்டு வருகிறது.
- 24 மணிநேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படுகிறது.
சென்னை :
ரெயில்நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கடந்த 2017-ம் ஆண்டு நிர்பயா நிதியின் கீழ் ரூ.500 கோடி மதிப்பில் 900 ரெயில்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று இந்திய ரெயில்வே அறிவித்தது. குறிப்பாக, ரெயில்நிலையங்களில் உள்ள நடைபாதைகள், ஓய்வு அறைகள், டிக்கெட் பகுதி ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் படிப்படியாக பொருத்தப்பட்டு வருகிறது. இதை ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இதன் மூலம், 24 மணிநேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படுகிறது.
இந்த நிலையில், தெற்கு ரெயில்வேயில் முதல்கட்ட திட்டத்தின் கீழ், சென்னை கோட்டத்தில் உள்ள 26 ரெயில்நிலையங்களில் ரூ.9 கோடியே 79 லட்சம் செலவில் 528 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, மந்தைவெளி, பசுமைவழிச்சாலை, கோட்டூர்புரம், இந்திரா நகர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி, சென்னை பூங்கா, சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட 26 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதேபோல, 2 மற்றும் 3-ம் கட்ட திட்டத்தில் அரக்கோணம், ஆந்திர மாநிலம் கூடூர் வழித்தடங்களில் உள்ள 50 ரெயில்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.