உள்ளூர் செய்திகள்

கல்லறை கட்டுவதற்காக புதைத்த தந்தையின் உடலை தோண்டி எடுத்த மகன்

Published On 2022-09-11 11:28 GMT   |   Update On 2022-09-11 11:28 GMT
  • தந்தையின் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து ஊட்டி எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு பிரவீன் சாமுவேல் கலெக்டரிடம் மனு கொடுத்து இருந்தார்.
  • ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த கல்லறை தோட்டத்தில் ரிச்சர்ட் அசரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை வி.ஐ.பி காலனி சேர்ந்தவர் பிரவீன் சாமுவேல். இவரது தந்தை ரிச்சர்ட் அசரியா. வயது மூப்பின் காரணமாக கடந்த ஜூன் 12-ம் தேதி அவர் இறந்தார்.

அந்த சமயத்தில் தொப்பம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் ரிச்சர்ட் அசரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்பகுதி சிறிய இடமாக இருந்ததால் யாரும் அங்கு கல்லறை கட்ட அனுமதி வழங்கவில்லை. ஆனால் பிரவீன் சாமுவேல் மற்றும் குடும்பத்தினர் தனது தந்தைக்கு கல்லறை கட்ட விரும்பினார்.

இதற்காக ஊட்டியில் இவர்களது குடும்பத்தினர் உறுப்பினராக உள்ள ஒரு கிறிஸ்துவ ஆலயத்தின் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்து கல்லறை கட்ட அனுமதி கிடைத்தது. தந்தையின் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து ஊட்டி எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு பிரவீன் சாமுவேல் கலெக்டரிடம் மனு கொடுத்து இருந்தார்.

மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு வருவாய் கோட்டாட்சியருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பலகட்ட விசாரணைக்கு பிறகு சடலத்தை தோண்டி எடுக்க வருவாய் கோட்டாட்சியரின் அனுமதி கிடைத்தது. இதனை அடுத்து 3 மாதங்களுக்கு பின்பு நேற்று வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்பு உடல் தோண்டி எடுக்கப்பட்டு ஊட்டிக்குகொண்டு செல்லப்பட்டது.

அங்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த கல்லறை தோட்டத்தில் ரிச்சர்ட் அசரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து பிரவீன் சாமுவேல் கூறும் போது, தந்தைக்கு கல்லறை கட்ட வேண்டும் என்ற எனது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. இதற்கு அனுமதி கொடுத்த கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News