உள்ளூர் செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுகோள்

Published On 2022-12-26 04:31 GMT   |   Update On 2022-12-26 04:31 GMT
  • முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் பலர் உள்ளனர்.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் இரண்டு தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்

திருப்பூர் : 

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 21.47 லட்சம் முதல் தவணை, 17.33 லட்சம் இரண்டாம் தவணை, 1.96 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி என இதுவரை மொத்தம்40.77 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 18 வயதை கடந்தவர்களுக்கு 22.44 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக 12 முதல் 14 வயதை கடந்தவர்களுக்கு 1.19 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வசதியாக ஆகஸ்டு 31-ந்தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களிடையே ஆர்வம் இல்லாததால் இலக்கு ஒரு லட்சம் நிர்ணயிக்கப்பட்ட போதும் 15 ஆயிரம் தடுப்பூசி செலுத்துவதே மாவட்ட சுகாதாரத்துறைக்கு சவாலாக இருந்தது.

செப்டம்பர் முதல் புதன்கிழமை மட்டும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 3 மாதமாக சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திய போதும், மக்களிடையே ஆர்வம் இல்லாததால் பெயரளவுக்கே முகாம்கள் நடந்து வந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 21 முதல் டிசம்பர் 21 வரையிலான ஒரு மாதத்தில் 1,346 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர் 211 பேர், இரண்டாம் தவணை செலுத்தியவர் 758 பேர், பூஸ்டர் செலுத்தியவர் 308 பேர்.

இன்னமும் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் பலர் உள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. ஆனால் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி பூஸ்டருக்கான காலக்கெடு கடந்த பின்பும் செலுத்தி கொள்ளாமல் பலர் உள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், உருமாறிய பி.எப்.,7 வகை வைரஸ் பரவல் உலக நாடுகளில் துவங்கியுள்ளது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் இரண்டு தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றனர். 

Tags:    

Similar News