உள்ளூர் செய்திகள்

சீர்காழி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பார்வையிட்டார்.

சீர்காழி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலைகள், செப்பேடுகளை பார்வையிட்ட புதுச்சேரி சபாநாயகர்

Published On 2023-04-28 09:01 GMT   |   Update On 2023-04-28 09:01 GMT
  • தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
  • தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் கோவிலில் வைத்து பராமரிப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் கடந்த 16-ம் தேதி யாகசாலை பூஜைக்காக மேற்குகோபுர நந்தவனத்தில் பள்ளம் வெட்டியபோது கிடைத்த ௨௨ ஐம்பொன் சுவாமி சிலைகள், 412 முழுமையாகவும், 84உடைந்த நிலையிலும் கிடைத்த தேவாரபதிகம் தாங்கிய செப்பேடுகள் ஆகியவை கோயில் பள்ளியறை அருகே பாதுகாப்பு பெட்ட அறையில் வைத்து சீல்வைக்கப்பட்டு இரண்டடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மாநில சபாநாயகர் ஆர்.செல்வம் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் வருகை புரிந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.

மாசிலாமணி சுவாமிகள் நிலையத்தில் தருமபுரம் ஆதீனம் 27}ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

அவருக்கு கோயில் பிரசாதங்கள், கும்பாபிஷேக பத்திரிக்கை ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் வழங்கினார். பின்னர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த சபாநாயகர் ஆர்.செல்வம், கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன்சிலைகள், செப்பேடுகளை தருமபுரம் ஆதீனத்துடன் இணைந்து பார்வையிட்டார்.

பின்னர் திருஞானசம்பந்தர் சந்நிதி கருங்கல் மண்டபமாக அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக அதில் திருஞானசம்பந்தருக்கு உமையம்ம் ஞானப்பால் வழங்குவது போன்று சிறப்பம் செதுக்கப்பட்ட கருங்கள் கல்வெட்டை எடுத்துவைத்து பணிகளை தருமை ஆதீனத்துடன் இணைந்து தொடக்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.செல்வம் கூறுகையில், சட்டநாதர்சுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள் மூலம் கோயிலின் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு தெரிய வருகிறது. கிடைக்கப்பெற்ற சிலைகள், செப்பேடுகளை பராமரிப்பதற்கும், பரிபாலம் செய்வதற்கும், முழு உரிமையோடு தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

மத்திய அமைச்சர் கிருஷ்ணாரெட்டியின் பிரதிநிதியாக செப்பேடுகள், ஐம்பொன் சிலைகளை பார்வையிட்டோம். கோயில் வளாகத்திலேயே சிலைகள்,செப்பேடுகளை வைத்து வழிபடவும், இவற்றை தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் கோயிலில் வைத்து பாரமரிப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவித்தார்.

அப்போது பாஜக மாவட்ட தலைவர் க.அகோரம், புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் அருள்முருகன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.சரண்ராஜ் உடனிருந்தனர்

Tags:    

Similar News