உள்ளூர் செய்திகள்

கேமராவில் பதிவான கரடியின் உருவம்.

கடையம் அருகே தோட்டத்தில் தேன்கூடுகளை சேதப்படுத்தும் கரடிகள்

Published On 2023-02-20 06:09 GMT   |   Update On 2023-02-20 06:09 GMT
  • கடையம் வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஒருநாள் முழுவதும் கரடி நடமாட்டம் உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர்.
  • கரடி நடமாட்டம் இரவில் இருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடையம்:

மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதி கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் 3 பேரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரடி கடித்து குதறியது.

இந்நிலையில் கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் டொமினிக் ராஜன் (வயது 63) என்பவரது தோப்பில் கடந்த 12-ந்தேதி இரவில் கரடி புகுந்து அங்கிருந்த 6 தேன் கூடுகளை சேதப்படுத்தியது.

இதையடுத்து கடையம் வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஒருநாள் முழுவதும் கரடி நடமாட்டம் உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர். எனினும் கரடி சிக்கவில்லை.

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இப்பகுதியில் கரடி நடமாட்டம் இரவில் இருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவில் ரகுமானியாபுரம் பகுதியில் நாய் குரைப்பது அதிகமாக காணப்படுகிறது.

எனவே இப்பகுதியில் கரடி நடமாடுவதாலேயே நாய் குரைப்பதாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் கரடி நடமாடிய தோப்பு அருகே அருந்ததியர் காலனி உள்ளது. இப்பகுதி மக்களும் பீதியுடனே காணப்படுகின்றனர். அருகிலுள்ள மைலப்பபுரம் பகுதியில் ஒருவரின் தோப்பில் காணப்பட்ட தேன் கூடுகளையும் கரடி சேதப்படுத்தி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இப்பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால், மதுப்பிரியர்கள் சிலர் இரவில் அங்கேயே போதையில் தூங்கி விடுகின்றனர். இதனால் அவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே வன அலுவலர்கள் கரடி நடமாடுவதை தடுக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News