வைக்கம் போராட்ட வெற்றி காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி- செல்லக்குமார்
- தீண்டாமைக்கு எதிராக காங்கிரஸ் நாடுதழுவிய அளவில் போராடியது.
- உண்மையான வைக்கம் போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் உரிமை காங்கிரசுக்கு சொந்தமானது.
சென்னை:
பெரியார் தலைமையில் கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கடந்த மாதம் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க,.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், விடுதலை சிறுத்தைகள் கழக தலைவர் திருமாவளவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தியாகி பார்த்தசாரதி செட்டியார் நினைவுநாள் நிகழச்சியில் கலந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் செல்லக்குமார் பேசும் போது, வைக்கம் போராட்ட வெற்றி என்பது காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி. ஆனால் இன்று எல்லோரும் உரிமை கொண்டாடுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
தீண்டாமைக்கு எதிராக காங்கிரஸ் நாடுதழுவிய அளவில் போராடியது. அப்போது வைக்கத்தில் நடத்தப்பட்ட போராட்ட வெற்றியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சமீபத்தில் கொண்டாடியது.
உண்மையான வைக்கம் போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் உரிமை காங்கிரசுக்கு சொந்தமானது.
வைக்கம் போராட்டத்தில் கேரளாவில் காங்கிரஸ் தோழர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். அவர்கள் அனைவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டதால் காந்தியடிகள் காங்கிரசின் பிரதிநிதியாக பெரியாரை கேரளாவுக்கு அனுப்பி வைத்தார். அப்படித்தான் பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார்,
இப்போது நான் கர்நாடகா, ஒடிசா மாநில பொறுப்பாளராக இருக்கிறேன். அங்கு சோனியா, ராகுல் உத்தரவின் பேரில் அவர்களது பிரதிநிதியாக ஒரு பேராட்டத்துக்கு சென்றால் அந்த வெற்றி எனக்கு கிடைக்கும் வெற்றி அல்ல காங்கிரசுக்கு கிடைக்கும் வெற்றி.
அதே போலத்தான் அன்று பெரியாரின் போராட்ட வெற்றி என்பது காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி.
ஆனால் இப்போது காங்கிரஸ் பெற்று தந்த வெற்றிகளையெல்லாம் காங்கிரசை புறந்தள்ளிவிட்டு மற்றவர்கள் அனுபவிக்கிறார்கள்.
தமிழகத்தில் 56 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இன்றைய அரசியல் ஓட்டுக்கு நோட்டு என்ற நிலையில் உள்ளது. ஆனால் அந்த ஓட்டு போடும் உரிமையை அனைவருக்கும் பெற்றுத்தந்த கட்சி காங்கிரஸ் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.