உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

Published On 2023-06-03 11:46 IST   |   Update On 2023-06-03 11:46:00 IST
  • பட்டாசு ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
  • பட்டா சாலையில் பங்குதாரர்களான கந்தசாமி, வீரமணி, மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:

சேலம் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்தவர்கள் கந்தசாமி (வயது 63), வீரமணி (54), சடையாண்டி ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி மகேஸ்வரி (40). இவர்கள் பங்குதாரராக சேர்ந்து பூத நாச்சியார் கோவில் பின்புறம் பட்டாசு தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 10-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் சதீஷ்குமார் (41), நடேசன் (50), பானுமதி (60) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். மேலும் காயமடைந்த மோகனா (38), வசந்தா (45), மகேஸ்வரி (34), மணிமேகலை (36), பிரபாகரன் (30), பிருந்தா (28) ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களை நேற்று சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அரசு அறிவித்த தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். மேலும் இறந்து போன 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் காசோலையையும் வழங்கினார்.

இந்த நிலையில் பட்டா சாலையில் பங்குதாரர்களான கந்தசாமி, வீரமணி, மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். மகேஸ்வரிக்கு காயம் அதிக அளவில் இருந்ததால் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கந்தசாமி மற்றும் வீரமணியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார்.

இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் மகேஸ்வரி நிலமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News