உள்ளூர் செய்திகள்

அரவை கொப்பரை அரசு கொள்முதல் மையங்கள் இன்று திறப்பு

Published On 2023-04-01 08:41 GMT   |   Update On 2023-04-01 08:41 GMT
  • அரவை கொப்பரை அரசு கொள்முதல் மையங்கள் இன்று திறக்கப்பட்டது.
  • கொப்பரை கொள்முதல் வாயிலாக தங்களது அரவை கொப்பரையினை விற்பனை செய்து பயனடையலாம்.

மேலூர்

மதுரை மாவட்டத்தில் மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி வட்டார ங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. சமீப காலமாக தேங்காய் மற்றும் கொப்பரை விலை சரிவு காரணமாக தென்னை விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண் விற்பனை குழு செயலாளர் மெர்சி ஜெயராணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு கொள்முதல் கொப்பரை மையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து கொப்பரை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இன்று முதல் செப்டம்பர் மாதம் வரை அரவை கொப்பரை ஒரு குவிண்டனுக்கு ரூ. 10 ஆயிரத்து 890 என்று குறைந்தபட்ச ஆதார விலையை அடிப்படையில் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அரவை கொப்பரைக்கான கொள்முதல் இலக்கு தலா 100 டன்களாக நிர்ணயிக்கப்பட்டது.கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரைக்குரிய தொகையானது எவ்வித இடைத்தரகும் இன்றி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாயிலாக கொப்பரையை விற்பனை செய்ய உள்ள விவசாயிகள் தங்களின் கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம், ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல்களுடன் மேலூர் மற்றும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு சென்று இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தேங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்துள்ள இத்தருணத்தில் மதுரை மாவட்ட விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கொப்பரை கொள்முதல் வாயிலாக தங்களது அரவை கொப்பரையினை விற்பனை செய்து பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Tags:    

Similar News