கூலிப்படை மூலம் கொலை செய்து கிணற்றில் வீசினேன் -கொல்லப்பட்ட போலீஸ்காரரின் மனைவி வாக்குமூலம்
- செந்தில்குமாரின் உடலை நேற்று முன்தினம் கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- வெள்ளைச்சாமி, செங்குட்டுவன் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). போலீஸ் ஏட்டாக பணியாற்றிய இவர், பணி காலத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் செந்தில்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி மாயமானார். இது தொடர்பாக செந்தில்குமாரின் தாயார் பாக்கியம் கல்லாவி போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே மாயமான செந்தில்குமாரின் செல்போனும், அவரது மகனின் செல்போனும், இவர்களது கார் டிரைவர் கமல்ராஜ் (37) செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை கடந்த 13-ந் தேதி விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் போலீசில் ஆஜராகாமல் கடந்த 14-ந் தேதி கிருஷ்ண கிரி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
அப்போது அவர்கள் செந்தில்குமாரை கொலை செய்து தென்பெண்ணை ஆற்றில் உடலை வீசி விட்டதாக போலீசாரிடம் கூறினர்.
இதையடுத்து இந்த கொலை தொடர்பாக செந்தில்குமாரின் மனைவி சித்ராவிடம் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் விசாரணை நடத்தினார்.
அப்போது செந்தில்குமாரை கொலை செய்து உடலை கல்லை கட்டி ஊத்தங்கரை பாரதிபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து செந்தில்குமாரின் உடலை நேற்று முன்தினம் கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, பாவக்கல்லைச் சேர்ந்த பெண் சாமியார் சரோஜா என்கிற சரோஜா தேவி (37), கூலிப்படையை சேர்ந்த ஊத்தங்கரை பாரதிபுரம் விஜயகுமார் (21), தூத்துக்குடி மாவட்டம் மாங்குட்டைபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த ராஜ பாண்டியன் (32) ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும் போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் தலைமறைவான கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமி, செங்குட்டுவன் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கைதான சித்ரா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனது கணவர் செந்தில்குமார் கடந்த 2008-ல் ஒரு காரை வாங்கி அதை வாடகைக்கு ஓட்டி வந்தார். எனது கணவரிடம் கார் டிரைவராக கமல்ராஜ் என்பவர் வேலை பார்த்தார். முதலில் அவருடன் நான் சாதாரணமாக பழகினேன். இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.
எனது கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் கமல்ராஜ் எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் உல்லாசமாக இருந்து வந்தோம். ஒரு நாள் எனது கணவர் செந்தில்குமார் வீட்டுக்கு வந்தபோது நான் கமல்ராஜூடன் தனிமையில் இருந்தேன்.
இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த பொருட்களை உடைத்தார். அதன் பிறகு அவருக்கும், கமல்ராஜூக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக கமல்ராஜ் கொடுத்த புகாரில் எனது கணவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வந்தார்.
எனக்கு தொடர்ந்து பிரச்சினைகள் வந்ததால் பாவக்கல்லை சேர்ந்த பெண் சாமியார் சரோஜாவை சந்தித்தேன். எனது பிரச்சினைகளை கேட்ட அவர், என்னிடம் கூலிப்படை உள்ளது. ரூ.10 லட்சம் கொடுத்தால் உனக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்து கட்டி விடலாம். யாருக்கும் தெரியாமல் கதையை முடித்து விடுவோம் என்று திட்டம் போட்டு கொடுத்தார்.
இதையடுத்து நான் ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் தயார் செய்து பெண் சாமியார் சரோஜாவிடம் கொடுத்தேன். அந்த பணத்தை கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமியிடம் சாமியார் கொடுத்தார்.
அப்போது நான், எனது கணவரின் கதையை முடித்து விடுங்கள். இதில் நான் சம்பந்தப்பட்டது யாருக்கும் தெரிய கூடாது என்று கூறினேன்.
அதன்படி சம்பவத்தன்று செந்தில்குமாரை எனது மகன் ஜெகதீஷ்குமார் மூலம் வீட்டிற்கு வரவழைத்தோம். அங்கு தயாராக இருந்த கூலிப்படையினர், அவரை அடித்துக்கொலை செய்தனர்.பின்னர் உடலில் கல்லை கட்டி பாரதிபுரத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் போட்டு விட்டோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் அளித்துள்ளார்.
பின்னர் கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.