உள்ளூர் செய்திகள்

பெயர் பலகையை அகற்ற வலியுறுத்தி திரண்ட பொதுமக்கள்

Published On 2023-08-24 07:58 GMT   |   Update On 2023-08-24 07:58 GMT
  • மேயர்-ஆணையாளர் பேச்சுவார்த்தை
  • மாநகராட்சி குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாகர்கோவில், ஆக.24-நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் குறைகளை தீர்த்து வைக்கும் வகையில் வாரந்தோறும் வியாழக்கிழமை குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். இதில் வீட்டு வரி, குடிநீர் வரி, நில அளவு, சொத்து வரி, ஆக்கிரமிப்பு அகற்றுவது உள்பட மொத்தம் 34 மனுக்கள் பெறப்பட்டன.

வைராவிளை ஊர் தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஏராள மானோர் இன்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சற்று பரபரப்பு நிலவியது.

பின்னர் அவர்கள் மேயர் மகேசை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக தர்மபுரம் ஊராட்சி மூலம் மாநகராட்சி பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்கில் ஒரு பெயர் பலகையை வைத்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் ஆணையர் உள்பட பல்வேறு துறை அதிகாரி களுக்கு புகார் மனு அளித்திருந்தோம்.

புகார் மனுவை விசாரித்த ஆணையர், தர்மபுரம் ஊராட்சி செயல் அலுவலரிடம், வைராவிளை ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் பெயர் பலகையை அகற்றுவதற்கு கடிதம் அனுப்பியும், பெயர் பலகை இதுவரை அகற்றப்படவில்லை. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து பெயர் பலகையை அகற்ற வேண்டும். இதே இடத்தில் மாநகராட்சி சார்பில் புதிய பெயர் பலகை அமைக்க இருப்பதாக தகவல் தெரிய வருகிறது.

ஊர் பெயரிட்டு புதிய பலகை அமைக்கும் பட்சத்தில் இரு ஊர்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டு சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இடத்தில் ஏற்கனவே இரு ஊர்களின் திருவிழாவின் போது மின்விளக்குகள் அமைப்பதில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பிரச்சினைக்குரிய இடத்தில் எந்த பெயர் பலகையும் இடம் பெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மேயர் மகேஷ் மற்றும் ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் வைராவிளை ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு ஊர் மக்களையும் அழைத்து சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

Tags:    

Similar News