உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் நகை கடைக்கு 'சீல்' வைப்பு

Published On 2023-10-10 09:13 GMT   |   Update On 2023-10-10 09:13 GMT
  • மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
  • மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலந்தது

நாகர்கோவில் :

தமிழகத்தில் உள்ள மழை நீர் வடிகால்களில் வீட்டில் உள்ள கழிவு நீர் கலப்பதால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கழிவு நீரை மழை நீர் வடிகாலில் கலக்காமல் இருக்க வீடுகளில் உறிஞ்சி குழாய் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் உறிஞ்சி குழாய் அமைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்திலும் வீடுகளில் இருந்து வெளியே வரும் கழிவுநீர்களை உறிஞ்சி குழாயில் விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியே வரும் செப்டிக் டேங்க் கழிவுகளை மழைநீர் வடிகாலில் விட்டால் அந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் செப்டிக் டேங்க் கழிவு நேரடியாக மழை நீர் வடிகாலில் வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார அதிகாரி ராஜாராம், சுகாதார ஆய்வாளர்கள் சத்யராஜ், பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அந்த நகை கடைக்கு வந்தனர். பின்னர் அந்த நகை கடையில் உள்ள செப்டிக் டேங்கில் இருந்து கழிவுநீர் மழை நீர் வடிகாலில் வரும் வகையில் மோட்டார் வைத்து பயன்படுத்துவதை அதிகாரிகள் பார்த்தனர்.

இதனை தொடர்ந்து அந்த நகை கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது நகைக்கடை தரப்பில் கடையில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் வெளியேறியதும் நகையில் உள்ள நகை இருப்புகளை சரி செய்து விட்டு வெளியே வருவதாக நகைக்கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் வெளியே வந்த பிறகு நகை கடைக்கு சீல் வைத்தனர். மேலும் கடைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இதனால் மீனாட்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News