உள்ளூர் செய்திகள்

மணக்குடி காயலில் சுற்றுலா படகு விட எதிர்ப்பு

Published On 2023-07-09 08:53 GMT   |   Update On 2023-07-09 08:53 GMT
  • முற்றுகை போராட்டத்திற்கு மீனவர்கள் திரண்டதால் பரபரப்பு
  • மீனவர்கள் போராட்டம் நடத்த குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் :

மணக்குடி காயலில் தனியார் பங்களிப்புடன் சுற்றுலா படகு வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.

இதற்கிடையில் படகு சவாரி விடுவதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளை சந்தித்தும் மனு அளித்தனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மீனவர் பிரிவு செயலாளர் சகாயம் தலைமையில் மணக்குடி காயலில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இந்த நிலையில் இன்று காலை பாரதிய ஜனதா கட்சி மீனவர் பிரிவு செயலாளர் சகாயம் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் படகில் முற்றுகை போராட்டம் நடத்த திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து போராட்டம் நடத்த வந்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் நடத்த வந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பாரதிய ஜனதா மீனவர் பிரிவு செயலாளர் சகாயம் கூறுகையில், மணக்குடி காயல் பகுதியில் சுற்றுலா படகு வசதி செய்வதனால் மீன்வளம் பாதிக்க கூடிய சூழல் ஏற்படும். எனவே அந்த பகுதியில் சுற்றுலா படகு வசதி ஏற்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மீனவர்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

பள்ளம்-மணக்குடி சாலை கடந்த 10 ஆண்டகளாக துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. உடனடியாக அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மீனவர்கள் போராட்டம் நடத்த குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News