உள்ளூர் செய்திகள்

புதுக்கடை அருகே பாசன குளத்தின் மடை உடைப்பு

Published On 2023-09-04 06:58 GMT   |   Update On 2023-09-04 06:58 GMT
  • சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளது
  • குளத்தின் அடி மடையை உடைத்த மர்ம நபர்கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

கிள்ளியூர் :

புதுக்கடை அருகே பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுவிளை பகுதியில் மேலகுளம் என்ற காட்டத்திகுளம் உள்ளது. மிகப்பழமையான இந்த குளம் தற்போது சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளது. கடுமையான கோடை காலங்களிலும் இயற்கையாக ஊற்று நீர் அதிகம் சுரப்பதால் இந்த குளத்தில் தண்ணீர் வற்றுவதில்லை.

இதனால் கோடை காலங்களில் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த குளத்தில் குளிக்க வருவது வழக்கம். இந்த குளத்தை நம்பி தற்போது சுமார் 50 ஏக்கருக்கும் அதிகமாக வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போதும் இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் குளத்தின் அடிமடை ஷட்டரை ஏதோ எந்திரத்தின் உதவியுடன் உடைத்து, தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். இதனால் தண்ணீர் வேகத்தால் பல ஏக்கர் வாழைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீராதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பட்டணம்கால் பிரிவு நீர்வளத்துறையின் இளநிலை பொறியாளர் (பொறுப்பு) பேபி உஷா தலைமையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து இது தொடர்பாக புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குளத்தின் அடி மடையை உடைத்த மர்ம நபர்கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News