உள்ளூர் செய்திகள்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆராட்டு

Published On 2022-07-15 08:16 GMT   |   Update On 2022-07-15 08:16 GMT
  • கொடிமரத்தில் இருந்து கொடி இறக்கப்பட்டது
  • திருவிழா நிறைவு பெற்றது

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற திருக்கோவில்களில் மிகவும் முக்கியமான கோவில்களில் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் இந்த கோவிலில் கடந்த ஆறு நாட்களாக நடந்து வந்த சிறப்புத்திருவிழா நேற்று சுவாமி ஆராட்டுடன் நிறைவடைந்தது.

108 வைணவத்திருப் பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்றதுமான திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் 22 நீள கடுசர்க்கரை யோக படிமத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பல ஆண்டுகளாக நடந்து வந்த திருப்பணியைத் தொடர்ந்து கடந்த ஜூலை 6-ந்தேதி கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. அத்துடன் அருகில் உள்ள சாஸ்தா சன்னதி, குலசேகரப்பெருமாள் சன்னதியிலும் கும்பாபி ஷேகம் நடந்தது. கும்பாபி ஷேகத்துக்குப் பின்னர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கடந்த 9-ந்தேதி புதியதாக தங்கக்கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று மாலை ஆறுநாள் திருவிழாவுக்காக கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் சுவாமி நாற்காலி வாகனம், அனந்த வாகனம், கமலவாகனம், பல்லக்கு வாகனம் ஆகியவற்றில் பவனி வருதல் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன் தினம் கோவில் வெளியே அரச மரம் அருகில் சாமி பள்ளி வேட்டைக்குச்செல்லும் நிகழ்வு நடந்தது.

நேற்று கோவில் ஆராட்டு விழாவுக்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை வழக்கமான பூஜைகள் நடந்தது. மதியம் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் ஆதிகேசவப் பெருமாள் மேற்குவாசல் வழியாக பக்தர்கள் புடை சூழ பறளியாறு பாயும் கிழக்குக்கடவிற்கு ஆராட்டுக்கு எழுந்தருளினார்.

திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடைவாளுடன் வாகனத்தின் முன் சென்றார். அப்போது வானம் இருண்டு மழை கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வாகனத்துடன் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் பறளியாற்றில் ஆதிகேசவப்பெருமாளுக்கு ஆறாட்டு, நிவேத்யம், தீபாரா தனையைத் தொடர்ந்து சுவாமி கோவிலுக்குத் திரும்புதல் நிகழ்ச்சி நடை பெற்றது.

திருவிழாவுக்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப் பட்டது. மதியம் அன்ன தானம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News